
உத்தரகண்டில் தங்கள் கடமையில் சரிவர செயல்படாத அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, டேராடூனில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்தரகண்டில் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரிகள் மந்தகதியில் செயல்படுவதாக புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதுபோன்ற அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் வகையிலான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
எனவே, மந்தமாக செயல்படும் அதிகாரிகள், தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
எனது அரசால், மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனில், அதிகாரிகள் திறம்பட, துரிதமாக செயல்பட வேண்டியது அவசியம் என்றார் அவர்.
உத்தரகண்டில் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.