
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத். உடன் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர்.
காஷ்மீர் மத்தியஸ்தம் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்குமாறு பிரதமர் மோடி தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை, எதிர்க்கட்சிகள் தீவிரமாக கையிலெடுத்துள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,
அதிபர் டிரம்ப் கூறியதுபோல, காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி உதவி கோரியிருந்தால், அது நம் நாட்டுக்கு பிரதமர் மோடி இழைத்த மிகப்பெரிய துரோகம்.
இந்த விவகாரத்தில் மோடி பதிலளிக்காமல், வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவிப்பது அரசின் பலவீனத்தையே காட்டுகிறது. அதிபர் டிரம்பை சந்தித்தபோது, மோடி என்ன பேசினார் என்பதை வெளிப்படையாக அனைவரிடத்திலும் மோடி தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மெளனமாக இருப்பது ஏன்? மோடியும், டிரம்பும் சந்தித்தபோது நிகழ்ந்த உரையாடலாக இது கூறப்படுகிறது.
அவ்வாறிருக்கையில், மோடி தானே இதற்கு பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில்கூட மோடி அமைதியாக இருப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றம் வந்து விளக்கமளிக்க வேண்டும்..: எதிர்க்கட்சி எம்.பி,க்களான, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், சமாஜவாதியின் ராம்கோபால் யாதவ், திமுகவின் திருச்சி சிவா ஆகியோர் டிரம்ப் கருத்து குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டி நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளியேறினர்.
அதன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் குலாம் நபி ஆஸாத் கூறுகையில், பிரதமர் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்ளவும், அதை நம்பவும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் அவரது விளக்கத்தை நாடாளுமன்றத்துக்கு வந்து அவர் கூற வேண்டும் என்றார்.
அதைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேச நலனில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்-பாஜக பதில்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது அக்கட்சிகளின் பொறுப்பற்றத் தனத்தை வெளிப்படுத்துகிறது; தேசநலனை விட அனைத்திலும் அரசியல் செய்வதே அவர்களுக்கு முக்கியம் என்று பாஜக பதிலளித்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு டிரம்பிடம் மோடி கோரவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவாக விளக்கமளித்து விட்டார். அத்தோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்றார்.