விடா முயற்சி விஸ்வரூப வெற்றி:  15 மாதத்தில் 2வது முறையாக முதல்வராகிறார் எடியூரப்பா! 

இது சாதனையா? சோதனையா? என்று தெரியவில்லை, கடந்த 15 மாதத்தில் 2வது முறையாக கர்நாடகாவின் முதல்வராகிறார் எடியூரப்பா.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி:  15 மாதத்தில் 2வது முறையாக முதல்வராகிறார் எடியூரப்பா! 


பெங்களூரு: இது சாதனையா? சோதனையா? என்று தெரியவில்லை, கடந்த 15 மாதத்தில் 2வது முறையாக கர்நாடகாவின் முதல்வராகிறார் எடியூரப்பா.

விடாமுயற்சி, மன உறுதி மற்றும் பொறுமை எனும் படைகளின் உதவியோடு, லிங்காயத் இனத்தைச் சேர்ந்த  எடியூரப்பா, கர்நாடகாவின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்க உள்ளார்.

கர்நாடகாவில் பாஜக தலைவர் எடியூரப்பா நாளை ஆட்சியமைக்க உள்ளார். அடுத்த வாரம், எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 99 எம்எல்ஏக்களும்,  எதிராக 105 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜிநாமா கடிதம் அளித்துவிட்டு மும்பையில் தஞ்சமடைந்ததால், கர்நாடகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியிருந்தது.  இதைத்தொடர்ந்து,  மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் அறிவித்தார். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதாவது, நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வி அடைந்துவிட்டது.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆளுநர் வஜுபாய் வாலாவை தனது அமைச்சரவை சகாக்களோடு சந்தித்த முதல்வர் குமாரசாமி, ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.

மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைந்த பிறகு, 2018 மே 23-ஆம் தேதி முதல்வராக குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை முதல்வராக காங்கிரஸைச் சேர்ந்த ஜி.பரமேஸ்வர் பதவியேற்றிருந்தார். 2018-இல் இரண்டாவது முறையாக கர்நாடக முதல்வரான குமாரசாமி, ஓராண்டு 61 நாள்கள் ஆட்சி செய்தார். இப்போது அந்த ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது.

முன்னதாக, 2006-ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மஜத ஆட்சி அமைந்தபோது, முதல் முறையாக 2006 பிப்ரவரி 3-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். அப்போது எடியூரப்பா துணை முதல்வராக இருந்தார் என்பது நினைவில்கொள்ளத் தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com