Enable Javscript for better performance
ஆந்திர ஆளுநராக விஸ்வபூஷண் ஹரிசந்தன் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    
    visvapoosan


    ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் (85) புதன்கிழமை பதவியேற்றார்.  
    விஜயவாடாவில் உள்ள தற்காலிக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆந்திர உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) சி.பிரவீண்குமார் புதிய ஆளுநராக விஸ்வபூஷண் ஹரிசந்தனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
    முன்பு முதல்வரின் முகாம் அலுவலகமாக இயங்கி வந்த இந்த வளாகம் புதிய ஆளுநருக்காக தற்காலிக ஆளுநர் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது.
    ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தெலங்கானா, ஆந்திரம் என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு இதுவரை ஒரே ஆளுநராக இ.எஸ்.எல்.நரசிம்மன் பதவி வகித்து வந்தார். ஆந்திர மாநிலத்திற்கென பிரத்யேகமாக தனி ஆளுநர் அண்மையில் நியமிக்கப்பட்டார். அதன்படி, பிரிக்கப்பட்ட ஆந்திரத்தின் இரண்டாவது ஆளுநராக ஹரிசந்தன் பொறுப்பேற்று கொண்டார்.  
    பதவியேற்பு விழாவில் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, தலைமைச் செயலர் எல்.வி.சுப்பிரமணியம், அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ஒடிஸாவைச் சேர்ந்த விஸ்வபூஷண் ஹரிசந்தன், சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
    1961-ஆம் ஆண்டு ஒடிஸா உயர்நீதிமன்ற வழக்குரைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1971-இல் அப்போதைய பாரதிய ஜன சங்கத்தில் இணைந்தார்.
    1980-இல் பாஜக நிறுவப்பட்டபோது,  அதன் ஒடிஸா மாநிலத் தலைவரானார். பின்னர் அக்கட்சியின் தேசிய நிர்வாகியாகவும் அவர் இருந்தார்.  அவசரநிலை பிரகடனத்தின்போது, நீதிபதிகளுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராகப் போராடியதால், 1975-இல் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். 1977 ஆம் ஆண்டில், ஹரிச்சந்தன் முதன்முறையாக ஒடிஸா எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டத்துறை அமைச்சரானார். அம்மாநில அமைச்சரவையில் பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார்.
    சிறந்த எழுத்தாளராக இருந்த அவர், பல்வேறு கதை, நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai