Enable Javscript for better performance
ஒடிஸா நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து: ஒருவர் பலி; 9 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஒடிஸா நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து: ஒருவர் பலி; 9 பேர் காயம்

    By DIN  |   Published on : 25th July 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    ஒடிஸா மாநிலம், தால்சேரில் இயங்கி வரும் அரசு நிலக்கரிச் சுரங்கத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர்.
    இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:
    இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மகாநதி நிலக்கரி நிறுவனத்தின் கீழ் தால்சேர் நிலக்கரி வயல் உள்ளது. இந்த நிலக்கரி வயலில் உள்ள சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளிகள் 13 பேர் சிக்கினர். 
    அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்த நிலையில் 9 தொழிலாளிகளை மீட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. இந்த இடிபாடுகளுக்குள் மேலும் 3 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
    சுரங்க மீட்புப் படையினருடன் உள்ளூர் காவல் துறை மற்றும் சுரங்கத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ஆகியோரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    விபத்து நிகழ்ந்த இடத்தை இந்திய நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகள் புதன்கிழமை பார்வையிட்டனர். விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக, நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பிரிவு பொது மேலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததே நிலச்சரிவுக்கு காரணம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தவறான தகவலாகும். இரவு நேரங்களில் சுரங்கத்தில் வெடிகுண்டுகளை பயன்படுத்த மாட்டோம். வெடிகுண்டுகளை வெடிப்பதற்கென்று முன்கூட்டியே நேரம் குறிக்கப்படும். அதுகுறித்து அனைவருக்கும் எச்சரிக்கை செய்த பின்னரே அவை வெடிக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
    இதனிடையே, சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதை தடுக்கும் வகையில், அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai