Enable Javscript for better performance
காங்கிரஸிலிருந்து விலகும் திட்டமில்லை: சித்து- Dinamani

சுடச்சுட

    
    sidhu


    காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் திட்டமில்லை என்று பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து புதன்கிழமை தெரிவித்தார். தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போது, அவர் இவ்வாறு கூறினார்.
    பஞ்சாபில் மக்களவைத் தேர்தலை தொடர்ந்து, மாநில அமைச்சரவையை முதல்வர் அமரீந்தர் சிங் மாற்றியமைத்தார். அப்போது, சித்துவிடமிருந்த உள்ளாட்சி, சுற்றுலாத் துறைகள் மாற்றப்பட்டு, மின்சாரத் துறை ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர், தனக்கு ஒதுக்கப்பட்ட புதிய துறையை ஏற்கவில்லை.
    இதனிடையே, தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக கூறி, கட்சித் தலைவர் ராகுலுக்கு ஏற்கெனவே எழுதியிருந்த கடிதத்தை, சித்து கடந்த 14-ஆம் தேதி சுட்டுரையில் வெளியிட்டார். அதற்கு மறுநாள்,  முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் அவர் ராஜிநாமா கடிதம் அனுப்பினார். எனினும், தனது முடிவுக்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. அந்தக் கடிதத்தை, முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த சனிக்கிழமை ஏற்றுக் கொண்டார். 
    இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு, தனது ஆதரவாளர்களை சித்து புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இக்கூட்டத்தில் சித்து பேசியதாக, காங்கிரஸ் கவுன்சிலர் மோனிகா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை என்று சித்து தெரிவித்துள்ளார். கட்சிக்காக தொடர்ந்து உழைக்கும்படி எங்களை ஊக்கப்படுத்தியதுடன், தனது தொகுதிக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு, மக்களிடம் குறைகளைக் கேட்டறிய உள்ளதாகவும் சித்து கூறியதாக மோனிகா சர்மா தெரிவித்தார்.
    பாஜகவில் இருந்தவரான சித்து, பஞ்சாபில் கடந்த 2017-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன் காங்கிரஸில் இணைந்தார். எனினும், ஆரம்பம் முதலே அமரீந்தர் சிங்குடன் அவர் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார்.
    மக்களவைத் தேர்தலின்போது, சீக்கிய மதப்புத்தகம் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, சித்து தெரிவித்த கருத்துகள், முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தின. அதேசமயம், உள்ளாட்சித் துறையை சித்து சிறப்பாகக் கையாளவில்லை என்றும், இதனால்தான் மக்களவைத் தேர்தலில் மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் கட்சிக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்றும் அமரீந்தர் சிங் குற்றம்சாட்டினார். இதற்கு, தனது துறை மட்டும் தனித்து விடப்பட்டதாக சித்து குறைகூறினார்.
    இந்த சூழலில்தான், ராகுல் காந்திக்கு எழுதியிருந்த ராஜிநாமா கடிதத்தை, சித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai