Enable Javscript for better performance
காஷ்மீர் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி- 2-ஆவது நாளாக வெளிநடப்பு- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி- 2-ஆவது நாளாக வெளிநடப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cong

    மக்களவையில் புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

    காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
    மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பில் ஈடுபட்டன. 
    இந்நிலையில், மக்களவை புதன்கிழமை காலை 11 மணிக்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் கூடியதும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் குழுத் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி எழுப்பினார். அப்போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்த விவகாரத்திற்கு ஏற்கெனவே வெளியுறவுத் துறை அமைச்சர் பதில் அளித்துவிட்டார். இதில் பிரச்னையில் ஈடுபடுவது ஏன்? என்றார்.
    கேள்வி நேர அலுவலை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தொடங்கியதையடுத்து, அவையின் மையப் பகுதியில் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களும் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி அவைத் தலைவரின் இடதுபுறமாகவும், விருதுநகர் தொகுதி உறுப்பினர் பி.மாணிக்கம் தாகூர் வலது புறமாகவும் நின்று கொண்டு உரத்த குரலில், வேண்டும்; வேண்டும் பிரதமர் அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதேபோன்று திமுக, காங்கிரஸ் கட்சிகளின் பிற உறுப்பினர்களும் உரத்த குரல் எழுப்பினர். 
    தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒரு கோஷத்தை தமிழில் கூற, வடமாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் வேறு ஒரு கோஷத்தை ஹிந்தியில் கூற குழப்பம் ஏற்பட்டது. எனினும், கோஷத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தனர். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுப்பியுள்ளதால், கேள்வி நேரம் முடிந்த பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதில் அளிப்பார் என்றார். அமளிக்கு இடையே தொடர்ந்து கேள்விநேரம் நடைபெற்று முடிந்ததும் காங்கிரஸ் குழுத் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரியை இந்த விவகாரத்தில் பேச மக்களவைத் தலைவர் அனுமதி அளித்தார். 
    மேலும், அவரது பேச்சுக்கு அரசு பதில் அளிக்கும் போது அவையில் இருக்குமாறும் அவரைக் கேட்டுக் கொண்டார். அப்போது சௌதரி பேசுகையில், டிரம்ப் தெரிவித்த கருத்துக்குப் பிறகு நாடு முழுவதும் குழப்பம் நிலவுகிறது. பிரதமர் மற்றும் டிரம்புக்கு இடையே இந்த விஷயம் நடைபெற்றுள்ளதால், பிரதமரிடமிருந்து பதிலைப் பெறுவதுதான் பொருத்தமாக இருக்கும். பிரதமரிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றார். 
    இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் பேசினார். அப்போது, மக்களவை பாஜக குழுத் துணைத் தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் எழுந்து பதில் அளிக்கத் தயாரானார். 
    அவ்வேளையில், காங்கிரஸ், திமுக மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 
    மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை:  ராஜ்நாத் சிங்​
    காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
    மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர், அவர் பேசியதாவது:


    அரசு கூறுவதை அவையில் இருந்து கேட்பதாக எதிர்க்கட்சியினர் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், தங்களது வாக்குறுதியை தகர்த்துவிட்டு அவையில் இருந்து வெளிநடப்புச் செய்துவிட்டனர்.
    ஜப்பானிலுள்ள ஒசாகா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின்போது, அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் உடனிருந்தார். எனவே, அவரது விளக்கம் நம்பகத்தன்மை வாய்ந்தது. 
    காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீர் பிரச்னை தொடர்பாக மட்டும் பாகிஸ்தானிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் பாகிஸ்தானிடம் எடுத்துரைக்கப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai