Enable Javscript for better performance
சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரம்: 5 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரம்: 5 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 25th July 2019 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SUPREMEcourt


    சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்குப் பதில் அளிக்க தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள், மத்திய அரசு, சிபிஐ ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஆறு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நிலையான மணல் குவாரி மேலாண்மை வழிக்காட்டுதலைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து அதை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரியும் கோவில்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த எம். அழகர்சாமி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
    அதில் கூறப்பட்டுள்ளதாவது: மணல் குவாரிகளால் தமிழகத்தில் ஏற்படும் 15 பாதிப்புகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. அவற்றில், நிலத்தடி நீர் குறைதல், தொழில், வேளாண், குடிநீர் தேவைகளுக்கான நீர் குறைதல், வேளாண் சாகுபடி நிலம் குறைதல், விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழத்தல், வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல், மனித உரிமை மீறல்கள், சாலை, மேம்பாலங்களுக்கான பாதிப்பு உள்ளிட்டவை வேளாண் பல்கலை. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாலாறு அதன் கிளை ஆறுகளான செய்யாறு, ஆரணியாறு, கொசத்தலையாறு, காவிரி, பவானி, வெள்ளாறு, வைகை, தாமிரவருணி ஆகிய ஆற்றுப்படுகைகளை இந்த பாதிப்புகளுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். கொள்ளிடம் படுகை மிக மோசமக பாதிக்கப்பட்டுள்ளது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    காவிரியில் அனுமதியுடன் 4 மணல் குவாரிகளும், சட்டவிரோதமாக 14 மணல் குவாரிகளும் செயல்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய 5 மாநிலங்களில் நிலையான மணல் குவாரி மேலாண்மை வழிக்காட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை. இதனால், மணல் குவாரி தொடர்பான பல்வேறு ஊழல்களுக்கு வித்திடுகின்றன. எனவே, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் போன்றவற்றைக் கொண்டிராத போது, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது.
     தற்போது செயல்பட்டு வரும் மணல் குவாரி குத்தைகைதாரர்கள் அனைவரையும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் போன்றவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். 
    அதுவரை மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். மணல் அள்ளுவதால் ஒரு பகுதி அல்லது ஒட்டு மொத்த மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல், சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்காமல் இருக்க வேண்டும். சட்டவிரோத மணல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களை எடுத்துரைத்தார். 
    அப்போது, நீதிபதிகள் இதுபோன்ற சட்டவிரோத மணல் குவாரிகளை உயர்நீதிமன்றங்களால் தடுக்க முடியாதா. ஏன் உச்சநீதிமன்றமே அதை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    இதைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநில அரசுகள், சிபிஐ இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai