Enable Javscript for better performance
சந்திரயான்-2: புவி சுற்றுவட்டப் பாதையில் முதல்நிலை உயர்த்தும் பணி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    சந்திரயான்-2: புவி சுற்றுவட்டப் பாதையில் முதல்நிலை உயர்த்தும் பணி வெற்றி

    By DIN  |   Published on : 25th July 2019 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chandrayaan

    (கோப்புப் படம்)

    விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை உயர்த்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் புதன்கிழமை தொடங்கினர். அன்றைய தினம் பிற்பகல் 2.52 மணியளவில் முதல்நிலை உயர்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். 
     மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நிலவை ஆய்வு செய்யப்போகும் சந்திரயான்-2 விண்கலம், இந்தியாவின் சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை பிற்பகலில் விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்டதைவிட 6000 கி.மீ. தொலைவிலான புவி சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது.
    அதாவது, புவியிலிருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் உடைய நீள்வட்டப் பாதையில் புவியை சுற்றிவரும் வகையில் விண்கலம் நிறுத்தப்பட்டது.
    சுற்றுவட்டப் பாதையில் அதன் நிலையை உயர்த்தும் பணியை விஞ்ஞானிகள் புதன்கிழமை தொடங்கினர். அதன்படி, விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என்ஜினை தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி 57 விநாடிகள் இயக்கி, திட்டமிட்டபடி புவியிலிருந்து குறைந்தபட்சம் 230 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 45,163 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு விண்கலத்தை வெற்றிகரமாக விஞ்ஞானிகள் நிலை உயர்த்தியுள்ளனர்.
    இரண்டாவது நிலை உயர்வை விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அதிகாலை 1.09 மணிக்கு மேற்கொள்ள உள்ளனர். அதன் மூலம் புவியிலிருந்து குறைந்தபட்சம் 262.9 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 54,848 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு விண்கலம் நிலை உயர்த்தப்பட உள்ளது.
    அதனைத் தொடர்ந்து ஜூலை 29, ஆகஸ்ட் 2, 6, 14 ஆகிய தேதிகளிலும் விண்கலம் படிப்படியாக நிலை உயர்த்தி இறுதியாக புவியிலிருந்து குறைந்தபட்சம் 278.4 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 4,12,505 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும் வகையில் நிறுத்தப்படும். 
    இந்த இறுதி புவி சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் சுற்றிவரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்றே, நிலவை நோக்கி நகர்த்தும் பணியும் தொடங்கப்படும். தொடர்ந்து 5 நாள்கள் இந்த நகர்வு நடைபெறும். பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று நிலவின் சுற்றுவட்டப் பாதையை விண்கலம் சென்றடையும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
    இவ்வாறு நிலவின் சுற்றுவட்டப் பாதையைச் சென்றடையும் விண்கலம், தொடர்ந்து 13 நாள்கள் நிலவைச் சுற்றிவரும். பின்னர் ஏவப்பட்ட 43 நாளில், அதாவது செப்டம்பர் 2-ஆம் தேதியன்று ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் பிரித்துவிடப்படும். பின்னர் தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றிவரும் லேண்டர், ராக்கெட் ஏவப்பட்ட 48-ஆம் நாளான செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai