Enable Javscript for better performance
சிறுபான்மையினர் கொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்: பிரதமருக்கு பிரபலங்கள் கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    சிறுபான்மையினர் கொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்: பிரதமருக்கு பிரபலங்கள் கடிதம்

    By DIN  |   Published on : 25th July 2019 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    முஸ்லிம், தலித் மற்றும் இதர சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் கும்பல் கொலை செய்யப்படுகிறார்கள்; அதை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு இல்லாமல் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    பிரபல இயக்குநர்கள் சியாம் பெனகல், அபர்ணா சென், வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, பாடகி சுபா முத்கல் ஆகியோர் உள்பட பல்வேறு துறையைச் சேர்ந்த 49 பிரபலங்கள், அறிவுஜீவிகள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
    இந்தியர்களாக இருப்பதில் பெருமைப்படும் நாங்கள், நம் நாட்டில் எப்போதும் அமைதி நிலவுவதையே விரும்புகிறோம். நமது நாட்டில் அண்மையில் நடைபெற்ற கொடூர சம்பவங்களைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி, கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் தலித் மக்களுக்கு எதிராக 840 வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்தது தெரிய வந்தது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதும் வெகுவாகக் குறைந்துள்ளது. 
    முஸ்லிம், தலித் மற்றும் பிற சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்படும் கும்பல் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஜெய் ஸ்ரீராம் என்ற சொல், வன்முறையைத் தூண்டும் சொல்லாக மாறி வருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிடாமல் இருப்பது தவறு.
    கும்பல் கொலைகள் மற்றும் தாக்குதல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்தால் மட்டும் போதாது. குற்றம் புரிந்தவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளீர்கள்? 
    ராம் என்ற பெயர் பெரும்பாலான மக்களுக்கு புனிதமான பெயராக உள்ளது. அதை களங்கப்படுத்தாதீர்கள். ஜனநாயக நாட்டில் ஒரு செயலுக்கு எதிர்ப்பு இல்லாமல் இருக்காது. எதிர்ப்புகள் இருந்தால்தான் அது ஜனநாயக நாடு. அரசுக்கு எதிராக கருத்து கூறுகிறார்கள் என்பதற்காக மக்களை தேச விரோதிகள், நக்ஸல்கள் என சொல்லக் கூடாது  என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
    சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளார்கள்..: நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளதாக பாஜக மூத்த தலைவரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான முக்தார் அப்பாஸ்  நக்வி  தெரிவித்துள்ளார். 
    பிரதமருக்கு பிரபலங்கள் எழுதிய கடிதத்தை குறித்து அமைச்சர் நக்வியிடம் புதன்கிழமை செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், குற்றச் சம்பவங்களை இனப் பிரச்னையாக மாற்ற யாரும் முயற்சிக்கக் கூடாது. நாட்டில்  தலித் மக்களும், சிறுபான்மையினரும் பாதுகாப்பாக உள்ளனர். மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியாத சிலர், இவ்வாறு பிரச்னைகளை கிளப்புகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதும் இதேதான் நிகழ்ந்தது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai