Enable Javscript for better performance
பயங்கரவாதத்தை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு: வெளியுறவு இணையமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதத்தை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு: வெளியுறவு இணையமைச்சர்

    By DIN  |   Published on : 25th July 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    muralitharan


    பயங்கரவாதத்தை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த முடியும் என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்க பயங்கரவாதம் இல்லா சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமையென்றும் தெரிவித்துள்ளது.
    இது தொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவு இணையமைச்சர் வி.முரளிதரன் புதன்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
    மற்ற அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள நல்லுறவைப் போல, பாகிஸ்தானிடமும் நல்லுறவு பேண மத்திய அரசு விரும்புகிறது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் ஆகியவற்றின் அடிப்படையில், அந்நாட்டுடனான அனைத்துப் பிரச்னைகளுக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
    இருதரப்பு பேச்சுவார்த்தைக்குத் தகுந்த சூழலை உருவாக்கும் பொறுப்பு தற்போது பாகிஸ்தானிடமே உள்ளது. அந்நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக நம்பகமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பாகிஸ்தானிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாதம், விரோதம், வன்முறை ஆகியவை இல்லாத சூழ்நிலையில் மட்டுமே இரு நாடுகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தை சாத்தியமாகும்.
    பதில் தாக்குதல்: இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களின் காரணமாகவே, கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே துல்லியத் தாக்குதல் நடவடிக்கையையும், கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலாகோட் தாக்குதல் நடவடிக்கையையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர்.
    கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்த்தப்பட்ட புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டிருந்த நெருங்கிய வர்த்தகக் கூட்டு நாடு அந்தஸ்து நீக்கப்பட்டது; அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரி 200 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. 
    எல்லை வர்த்தகத்துக்குத் தடை: இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளில், ஆயுதங்கள், போதைப் பொருள்கள், கள்ள நோட்டுகள் உள்ளிட்டவை சட்டத்துக்குப் புறம்பாகக் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவின் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரப்படுகிறது. பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சர்வதேச அரங்கில் ஐ.நா. தடை விதித்துள்ளது.
    ஒருங்கிணைக்கும் பணி: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை கடந்த மே மாதம் 1-ஆம் தேதி சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதைத் தடுப்பதற்கான சர்வதேச அமைப்பு, பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளது.
    அனைத்து வகையிலான பயங்கரவாதத்தையும் இந்தியா எதிர்க்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ள அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்று அந்த பதிலில் வி.முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai