Enable Javscript for better performance
பயங்கரவாத தடுப்புச் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேறியது- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாத தடுப்புச் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேறியது

    By DIN  |   Published on : 25th July 2019 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amithsha

    மக்களவையில் புதன்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.


    பயங்கரவாத தடுப்பு தொடர்பான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. இச்சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள திருத்தங்கள் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
    ஏனெனில், பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன என்ற சந்தேகம் ஏற்பட்டால், மாநில போலீஸாரின் அனுமதியின்றி எந்த மாநிலத்துக்கும் சென்று நடவடிக்கை எடுக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) இந்த சட்டத் திருத்தம் அதிகாரம் வழங்குகிறது.
    சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    முன்னதாக, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதத்தை வேருடன் அழிக்கும் வகையிலேயே இந்தச் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம். ஆனால், மத்திய அரசு தேசப் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது.
    முன்பு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் இந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இப்போது பாஜக கூட்டணி ஆட்சியில் செய்யப்படும் திருத்தங்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பது தெரியவில்லை.
    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதுதான் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, இச்சட்டம் மூலம் எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்பட்டன. 
    கொள்கை என்ற பெயரில் சிலர் நகர்ப்புறங்களில் நக்ஸல் தீவிரவாதத்தை தூண்டி வருகின்றனர்; அவர்கள் மீது அரசு எவ்வித கருணையும் காட்டாது. பாஜக ஆட்சியில் இருக்கும்போது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாதபோதும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வந்துள்ளது என்றார்.
    இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த திருத்தங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டன.
    எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே பேசுகையில், தேசிய பயங்கரவாத தடுப்பு மையம், தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்பான சட்டங்களை முன்பு காங்கிரஸ் அரசு திருத்தியபோது, அப்போது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை இப்போது நினைவுகூர விரும்புகிறேன். மேலும், கூட்டாட்சி நடைபெறும் நமது நாட்டில் மத்திய அரசு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரும்போது மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அப்போது மோடி கூறினார் என்றார்.
    அப்பாவிகளைத் துன்புறுத்தும் வகையில் இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி குற்றம்சாட்டினார்.
    சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை பயங்கரவாதி என்று கூறி குற்றம்சாட்ட முடியும் என்பது மிகவும் அபாயகரமானது என்று காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவீத் எதிர்ப்பு தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai