Enable Javscript for better performance
போக்ஸோ சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் நிறைவேறியது- Dinamani

சுடச்சுட

  

  போக்ஸோ சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் நிறைவேறியது

  By DIN  |   Published on : 25th July 2019 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  parliment


  பாலியல் வன்கொடுமைகளில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும்  சட்டத்தில் (போக்ஸோ) திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. கட்சி வேறுபாடுகளின்றி மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த மசோதாவுக்கு ஆதரவளித்தனர்.
  இதையடுத்து, குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்படுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் இந்த மசோதா, மக்களவைக்கு அனுப்பப்படவுள்ளது.
  போக்ஸோ சட்டத் திருத்த மசோதாவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தார். மசோதா மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் எம்.பி. விவேக் கே.தங்கா கூறியதாவது:
  பாலியல் வன்கொடுமைகளில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும்  சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதை வரவேற்கிறேன். ஆனால், கடுமையான தண்டனைகள் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்காது. நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்த விவரங்களை, கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பதிவு செய்யவில்லை. 
  இதுபோன்ற சம்பவங்களில் தெரிவிக்கப்படும் புகார்களில், மிகக் குறைந்த அளவிலான வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 1 லட்சம் வழக்குகளில், சுமார் 10,000 வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் விவேக் கே.தங்கா.


  துரித கதியில் விசாரணை: இதையடுத்து, சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சன் உணர்வுபூர்வமாகப் பேசியதாவது:
  நாட்டின் தலைநகர் தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு 23 வயதுயுடைய பெண், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார். இதையடுத்து, நிர்பயா சட்டம் இயற்றப்பட்டது; இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தக் குற்றங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. 
  சட்டங்களை உருவாக்குவதும், அதில் திருத்தங்கள் மேற்கொள்வதும் மட்டும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையாது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் பதிவு செய்யப்படும் வழக்குகளை துரித கதியில் விசாரணை நடத்துவதும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்வதும் அவசியமாகும்.
  தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்குத் தகுந்த அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சுதந்திரமான தீர்ப்பாயங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களை இழைப்பவர்களின் வயதைக் கருத்தில் கொள்ளாமல், அனைவருக்கும் ஒரேமாதிரியான தண்டனைகளை வழங்க வேண்டும் என்றார் ஜெயா பச்சன்.
  கருத்தில் கொள்ளவில்லை: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபீர் ரஞ்சன் விஸ்வாஸ் கூறுகையில், உடல்ரீதியானத் தொடர்பு உள்ளிட்ட சில விஷயங்கள் போக்ஸோ சட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. ஆனால், அதை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. கலப்புத் திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் போக்ஸோ சட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதை மத்திய அரசு ஆராய வேண்டும் என்றார்.
  விழிப்புணர்வு நடவடிக்கைகள்: ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ககஷன் பர்வீன் கூறுகையில், போக்ஸோ சட்டம் தொடர்பாக தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை வாயிலாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  பிஜு ஜனதா தளம் எம்.பி. சரோஜினி ஹேம்ப்ரம், தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. லிங்கையா யாதவ், அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த், திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் உள்ளிட்டோரும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
  சட்டத் திருத்த விவரங்கள்: குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இந்த மசோதா வழிவகுக்கிறது. 
  இது குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுவதைத் தடுக்கும். மேலும், குழந்தைகளை மையப்படுத்தி ஆபாசப்படம் எடுக்கப்படுவதைத் தடுப்பதற்கான வரையறையை இந்த மசோதா அளித்துள்ளது. இந்த வரையறையில் வெறும் காணொலி மட்டும் அல்லாமல், குழந்தைகளை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்தல், குழந்தைகளின் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ஆபாசப் புகைப்படம் உருவாக்குதல் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
  இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்துள்ளது. குழந்தைகள் தொடர்பான பாலியல் காட்சிகளை நீக்காமல் இருப்பது அல்லது அதுதொடர்பான தகவலை தெரிவிக்காமல் இருப்பது குற்றம் என்றும், இந்த குற்றத்தை முதல் முறை செய்தால், ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் அபராதம் விதிக்கப்படும்; இதே குற்றத்தை தொடர்ந்து செய்தால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். 
  முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய ஆட்சியின் கீழ் கடந்த ஜனவரி மாதம் போக்ஸோ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், மக்களவையின் பதவிக்காலம் கடந்த மே மாதம் நிறைவடைந்ததையடுத்து, அந்த மசோதா காலாவதியானது. இதையடுத்து, இந்த மசோதாவுக்கு புதிய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இம்மசோதா தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
  அடுத்ததாக, இந்த மசோதா மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மக்களவை உறுப்பினர்கள், இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பிவைக்கப்படும். அதன் பிறகு, இந்த மசோதா சட்டவடிவு பெறும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai