Enable Javscript for better performance
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா: எதிர்க்கட்சிகள் காரசார விவாதம்- Dinamani

சுடச்சுட

  

  மக்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் காரசார விவாதம்

  By DIN  |   Published on : 25th July 2019 06:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ravishankar1

  கோப்புப்படம்


  முத்தலாக் தடை மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. 

  உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யம் நடைமுறையைச் சட்டப்படி தடை செய்ய வழி வகுக்கும் முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மீது ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், 

  "பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட 20 இஸ்லாமிய நாடுகள் முத்தலாக்கை தடை செய்துள்ளன. அப்படி இருக்கையில், மதச்சார்பற்ற இந்தியா ஏன் இதை தடை செய்யக் கூடாது?" என்றார். 

  இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்எஸ்பி உறுப்பினர் என்.கே. பிரேமசந்திரா,

  "முஸ்லிம் மதத்தினரை குறிவைக்கும் அரசியல் நோக்கமுடையது. இது பாஜகவின் குறிப்பிட்ட அரசியல் நோக்கமானதாகும்.
  உங்களுக்கு அப்படி பிரச்னை இருந்தால், கும்பல் கொலைகளை தடுப்பதற்கு ஏன் நீங்கள் சட்டம் இயற்றக் கூடாது? சபரிமலை கோயில் விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
     
  இந்த சட்டத்தின் மூலம், சிவில் குற்றங்கள் கிரிமினல் குற்றங்களாக மாற்றப்படுகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் முறைகேடாகும். சிறையில் இருக்கும் ஒரு கணவரால் எப்படி மனைவிக்கு இழப்பீடு வழங்க முடியும். இது முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் நோக்கத்தை உள்ளடக்கிய மசோதா அல்ல. முஸ்லிம் ஆண்களை துன்புறுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது" என்றார்.

  அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கூறுகையில், 

  "இந்த சட்டமானது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படி என்றால், கும்பல் கொலைகள் மற்றும் சபரிமலை உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டுவரவில்லை. கணவர் மூன்று ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. அப்படி என்றால், இந்த காலத்தில் அந்த பெண் என்ன செய்வார்" என்றார்.    

  காங்கிரஸ் எம்பி முகமது ஜாவெத் கூறுகையில், 

  "இந்த மசோதாவை பரிசீலனைக்காக நிலைக் குழுவுக்கு அனுப்புமாறு அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன். முஸ்லிம் பெண்கள் மட்டும் அல்லாமல், கணவரைப் பிரிந்து வாழும் அனைத்து சமுதாயப் பெண்களையும் கருத்தில் கொண்டு புதிய சட்டம் குறித்து ஆலோசிக்க வேண்டும். முஸ்லிம் பெண்களைவிட ஹிந்து பெண்களே அதிகம் விவாகரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சட்டம் முஸ்லிம் ஆண்களை சிறையில் அடைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதா, முஸ்லிம் பெண்களை மற்ற பெண்களிடம் இருந்து பிரிப்பதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் 14-ஐ மீறுகிறது.

  முஸ்லிம் பெண்களை பாதுகாப்பதற்காக கூடுதல் சட்டம் தேவையில்லை. கணவர் சிறைக்குச் சென்றால், அவர்களுடைய குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள். 2.5 லட்சம் பெண்கள் விவாகரத்தாகி தனியாக உள்ளனர். அதில் 2 லட்சம் பேர், ஹிந்து சகோதரிகள். அவர்களுக்கு உரிய நீதி வழங்குங்கள்" என்றார்.

  இந்த விவாதங்களுக்கு நடுவே மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளிக்கையில், 

  "வரதட்சணை கொடுமைச் சட்டம் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை கீழ் ஹிந்து மற்றும் முஸ்லிம் ஆண்கள் தண்டிக்கப்படும்போது, முத்தலாக் நடைமுறையை பின்பற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?" என்றார். 

  இந்த மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன் திரிணமூல் காங்கிரஸ் எம்பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.  

  முத்தலாக் தடை மசோதா:

  உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையைச் சட்டப்படி தடை செய்யும் முத்தலாக் தடை மசோதாவை, பாஜக தலைமையிலான முந்தைய ஆட்சி கொண்டுவந்தது. இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

  எனினும், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் இந்த மசோதா கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தது. மக்களவையின் பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், நிலுவையில் இருந்த முத்தலாக் தடை மசோதாவும் காலாவதியானது.

  இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், கடந்த பிப்ரவரி மாதமும் இரண்டு முறை அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தையடுத்து, முத்தலாக் மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai