Enable Javscript for better performance
மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசுக்கு 2 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசுக்கு 2 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு

    By DIN  |   Published on : 25th July 2019 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kamalnath


    மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவர் ஆதரவு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எம்எல்ஏக்கள் இருவரும் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள்தான். சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், பாஜகவுக்கு கட்சி மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    கர்நாடகத்தில், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ பாஜகவின் திரைமறைவு நடவடிக்கைகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அடுத்ததாக மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடலாம் என்று கூறப்படும் நிலையில், அந்த மாநில காங்கிரஸ் அரசுக்கு பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தது அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
    மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் குற்றத் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. 230 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் 121 எம்எல்ஏக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு கூடுதலாகும். அப்போதுதான், பாஜக எம்எல்ஏக்கள் நாராயண் திரிபாதி, சரத் கோல் ஆகியோர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது தெரியவந்தது.
    இது தொடர்பாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத் கூறுகையில், காங்கிரஸ் அரசு மைனாரிட்டி அரசு என்று பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. எங்கள் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்போது பாஜக எம்எல்ஏக்கள் இருவர் எங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்றார். அப்போது, அந்த இரு எம்எல்ஏக்களும் உடன்இருந்தனர். ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தது குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள் இருவரும், எங்கள் தொகுதி நலன்களைக் கருத்தில் கொண்டு மசோதாவை ஆதரித்து வாக்களித்தோம். இதனால் நாங்கள் கட்சி மாறிவிடுவோம் என்று அர்த்தமல்ல என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai