Enable Javscript for better performance
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது: மத்திய அரசு  மீண்டும் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது: மத்திய அரசு  மீண்டும் உறுதி

    By DIN  |   Published on : 25th July 2019 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vote


    மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வெளிநாடுகளின் உதவியில்லாமல் உள்நாட்டு அரசு பொதுத் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை; அதில் ஒருபோதும் முறைகேடு செய்ய முடியாது என்று மக்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
    மக்களவைத் தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஸ்திரத் தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. வாக்குச் சீட்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எனினும், இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.
    அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் உண்மைத் தன்மை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு மத்திய சட்டம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை எழுத்து மூலம் பதிலளித்தார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:
    தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர் குழுவிடம் ஆலோசனை கோரிய பின்னர், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரித்தன. வெளிநாடுகளில் இருந்து எந்த உதவியும் கோரப்படாமல் முழுவதும் இந்தியாவிலேயே இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. 
    கடந்த 1989 ஆம் ஆண்டில் முதல் முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர், 2007 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 14.86 லட்சம் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 11.59 லட்சம் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்கள் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவற்றில் ஒருபோதும் முறைகேடுகளைச் செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. 
    3 ஆண்டுகளில் 239 செயற்கைக்கோள்கள்..: கடந்த 3 ஆண்டுகளில் 239 செயற்கைக்கோள்கைகளை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின்(இஸ்ரோ) கீழ் இயங்கும் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    இஸ்ரோவின் கீழ் இயங்கும் வர்த்தக ரீதியிலான நிறுவனங்கள் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், விண்வெளித் துறையின் கீழ் மத்திய அரசு பல நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்றான ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 239 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு செலுத்தப்பட்டன. இதன் மூலம், ரூ. 6, 289 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
    கட்டாய ஓய்வு குறித்த ஆய்வு..: கட்டாய ஓய்வு அளிக்கும் பிரிவின் கீழ் கடந்த 2014-19 ஆண்டுகளில் 1.19 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களின் பணி நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்தது.
    மந்தநிலையில் செயல்படும் மத்திய அரசு அதிகாரிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில்,பணியில் சிறப்பாக செயல்படாதவர்களைக் கண்டறிவதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் 1.19 லட்சம் குரூப்-ஏ மற்றும் குரூப்-பி அதிகாரிகளின் பணி நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 125 குரூப்-ஏ மற்றும் 187 குரூப்-பி அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்குமாறு அரசு பரிந்துரைத்தது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai