Enable Javscript for better performance
முத்தலாக் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறுகிறது?- Dinamani

சுடச்சுட

    
    muthalak

    உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையைச் சட்டப்படி தடை செய்ய வழி வகுக்கும் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையில் வியாழக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் மசோதாக்களின் பட்டியலில் முத்தலாக் மசோதாவும் இடம் பெற்றுள்ளது. பாஜக கூட்டணிக்கு மக்களவையில் தனிப்பெரும்பான்மை உள்ளதால் மசோதா நிறைவேறுவதில் எவ்விதப் பிரச்னையும் இருக்காது. மேலும், அனைத்து எம்.பி.க்களும் வியாழக்கிழமை அவை நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்ற வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
    இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள விதிமுறைகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளதாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
     மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. 
    உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையைச் சட்டப்படி தடை செய்யும் நோக்கில், பாஜக தலைமையிலான முந்தைய ஆட்சியில் முத்தலாக் தடை மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 
    எனினும், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் இந்த மசோதா கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தது. மக்களவையின் பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், நிலுவையில் இருந்த முத்தலாக் தடை மசோதாவும் காலாவதியானது.
    இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், கடந்த பிப்ரவரி மாதமும் இரண்டு முறை அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. 
    மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தையடுத்து, முத்தலாக் மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai