Enable Javscript for better performance
முன்னாள் பிரதமர்களின் நினைவாக பிரமாண்ட அருங்காட்சியகம்: பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் பிரதமர்களின் நினைவாக பிரமாண்ட அருங்காட்சியகம்: பிரதமர் மோடி

    By DIN  |   Published on : 25th July 2019 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் சந்திர சேகர் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, 


    அனைத்து முன்னாள் பிரதமர்களும் நாட்டுக்காக ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
    முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் வாழ்க்கை தொடர்பாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் எழுதிய புத்தக வெளியீட்டு விழா, தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
    முன்னாள் பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் தொடர்பாக இன்றைய தலைமையினர் மிக குறைவாகவே அறிந்துள்ளனர். முன்னாள் பிரதமர்கள் பலர் நாட்டுக்காக ஆற்றிய பணிகள், சில அரசியல் சக்திகளின் முயற்சிகளால் மறக்கச் செய்யப்பட்டன. சுதந்திரத்துக்கு பிறகு, அம்பேத்கர், சர்தார் படேல் ஆகியோரின் புகழை கெடுக்கும் முயற்சிகள் நடைபெற்றன.
    நமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசியல் தீண்டாமையும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான முதல்படியாக, அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்கள் நாட்டுக்காக ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் பிரமாண்ட அருங்காட்சியகத்தை அமைக்க எனது அரசு முடிவு செய்திருக்கிறது. 
    ஐ.கே.குஜ்ரால், தேவெகௌடா, மன்மோகன் சிங் என நாட்டுக்காக பங்களித்த அனைத்து பிரதமர்களின் பங்களிப்பையும் போற்றும் வகையில் அருங்காட்சியம் அமையும். மக்களின் ஆசியுடன் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம். முன்னாள் பிரதமர்கள் தொடர்புடைய பொருள்கள் மற்றும் தகவல்களை அரசுடன் பகிர்ந்துகொள்ளுமாறு, அவர்களது குடும்பத்தினரை கேட்டுக் கொள்கிறேன் என்றார் பிரதமர் மோடி.
    ஹரிவன்ஷ் எழுதிய புத்தகம் தொடர்பாக பேசிய அவர், சந்திர சேகர் வாழ்ந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு விஷயங்களை தெளிவுபடுத்தியதன் மூலமாக துணிச்சலான பணியை ஹரிவன்ஷ் செய்திருக்கிறார் என்றார்.
    இந்நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai