Enable Javscript for better performance
மும்பையில் கன மழை: ரயில், வாகனப் போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மும்பையில் கன மழை: ரயில், வாகனப் போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    flood

    மும்பையில் குர்லா பகுதியில் கன மழை காரணமாக வெள்ளக்காடாகிய சாலையில் சிரமப்பட்டு நடந்து செல்லும் மக்கள். 


    மும்பையில் ஒரு வாரத்துக்குப் பிறகு புதன்கிழமை கன மழை பெய்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. புறநகர் ரயில்களின் போக்குவரத்தும், சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.
    நாட்டின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் கடந்த வாரம் கனமழை பெய்ததால் நகரமே ஸ்தம்பித்தது. அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. புதன்கிழமை காலையிலும் கன மழை பெய்தது. புறநகரான அந்தேரி பகுதியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக எதிரே வருவதைப் பார்க்க முடியாத நிலை காரணமாக மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்ததாக பிருஹன் மும்பை மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவர்களில் ஜூஹு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் பணிபுரியும் இருவரும் அடங்குவர். அவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    எனினும், மும்பையைச் சுற்றியுள்ளஅணைகளும் நீர்த்தேக்கங்களும் வறண்டு விட்ட நிலையில், தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் நகர மக்கள் தற்போது பெய்துள்ள மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    மும்பையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக தாதர், மத்திய மும்பை, குர்லா, அந்தேரி, சாகிநாகா ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கன மழை காரணமாக மும்பையையொட்டி அமைந்துள்ள 6 நீர்த்தேக்கங்களிலும் போதுமான நீர் இருப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
    தெற்கு மும்பையில் உள்ள கொலாபா பகுதியில் செவ்வாய்க்கிழமை 8.30 முதல் புதன்கிழமை அதிகாலை 5.30 மணி வரை 171 மி.மீ. மழை பெய்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் புறநகரான சான்டா குரூஸ் பகுதியில் 58 மி.மீ மழை பெய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
    பிருஹன் மும்பை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், மலபார் ஹில் பகுதியில் 164 மி.மீ.,  கிராண்ட் ரோடு பகுதியில் 162 மி.மீ., கல்பா தேவி பகுதியில் 152 மி.மீ., பாந்த்ரா பகுதியில் 134 மி.மீ., செம்பூர் பகுதியில் 102 மி.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    நகரின் சில பகுதிகளில் வெள்ள நீர் அதிகரித்து காணப்பட்டால் மாநகரப் பேருந்துகள் சில இடங்களில் மாற்றி விடப்பட்டதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. இதேபோல் தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியிருந்ததால் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
    இது தொடர்பாக மத்திய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் சுனில் உதாசி கூறுகையில், குர்லாவுக்கும் சயன் பகுதிக்கும் இடையிலான ரயில் வழித்தடத்தில் நீர் தேங்கியிருந்த காரணத்தால் ரயில்களின் இயக்கத்தில் 10 முதல் 15 நிமிட தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். எனினும், நகரின் மேற்குப் பகுதியில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கியதாகவும் அவர் தெரிவித்தார். 
    வானிலை ஆய்வு மையத்தின் மற்றொரு அதிகாரி கூறுகையில், அரபிக் கடலோரத்தில் இருந்து மும்பை நோக்கி மேகங்கள் நகர்ந்து வருவதாகவும் , தற்போது உருவாகி வரும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக மும்பை பகுதியில் அடுத்த 48 மணிநேரங்களுக்கு மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டார். மும்பைக்கு அருகில் கொங்கண் பிராந்தியத்தில் அமைந்துள்ள ராய்கட், ரத்னகிரி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai