எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) திருத்தம் கொண்டுவரும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேறியது. 
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) திருத்தம் கொண்டுவரும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேறியது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) திருத்தம் கொண்டுவரும் மசோதா மக்களவையில் கடந்த திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் விவாதம் நடத்த கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த மசோதா மீது விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்கு முன்பாகவே ஆய்வுக்காக தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. 

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதனால், காங்கிரஸ் உறுப்பினர்கள், "மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவிழக்க செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது" என அவையை ஒத்திவைக்குமாறு கோஷம் எழுப்பினர். 

திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். 

காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்பாமல் விவாதத்துக்கு எடுக்க முடியாது என்று தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்த மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, "மற்ற அவையில் நிறைவேறிய ஒரு மசோதாவுக்கு கண்ணை மூடி ஆதரவு தெரிவிக்க முடியாது. மாநிலங்களவை தனக்கான பணியை உணர வேண்டும்" என்றார். 

எனினும், இந்த மசோதா மீதான விவாதம் தொடரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு நடுவே, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், 

"ஆர்டிஐ சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான எந்தவித உள்நோக்கமும் கிடையாது. அதேசமயம், இந்த மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்புவதற்கான அவசியமும் இல்லை" என்றார். அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணனும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். 

இதன்பிறகு, தொடர்ந்து எதிர்ப்புகளைப் பதிவு செய்த எதிர்க்கட்சிகள், குலாம் நபி ஆசாத் தலைமையில் மாநிலங்களவை நிகழ்ச்சிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. இதையடுத்து, மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்துக்கு எதிராக 117 உறுப்பினர்களும், ஆதரவாக 75 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com