கர்நாடகத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: பேரவைத் தலைவர்  ரமேஷ்குமார் உத்தரவு

கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி எம்எல்ஏ ஆர்.சங்கர், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ரமேஷ்ஜார்கி ஹோளி,  மகேஷ் குமட்டஹள்ளி ஆகிய 3 பேரையும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்
கர்நாடகத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: பேரவைத் தலைவர்  ரமேஷ்குமார் உத்தரவு

கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி எம்எல்ஏ ஆர்.சங்கர், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ரமேஷ்ஜார்கி ஹோளி,  மகேஷ் குமட்டஹள்ளி ஆகிய 3 பேரையும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கர்நாடக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூரு விதான செளதாவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் கூறியது:  கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினராக இருக்கும் சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதங்கள் என்னிடம் தரப்பட்டுள்ளன. இதேபோல, அரசியலமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையின்படி ஒருசில எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ், மஜத கட்சிகள் என்னிடம் புகார் மனுக்களை அளித்துள்ளன.  அவற்றையும் பரிசீலித்து வருகிறேன். 


ராஜிநாமா கடிதங்களை ஏற்கவும்,  தகுதிநீக்கம் செய்யாமல் என்னைத் தடுக்கவும் கோரி எம்எல்ஏக்கள் பலர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதனிடையே, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு வீழ்ந்துள்ளது. அதன் பின்னணியில் தங்கள் ராஜிநாமா கடிதங்களை விரைவில் ஏற்க வேண்டும் என்பது எம்எல்ஏக்களின் விருப்பமாகும். 
அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் விருப்பமாகும்.  அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் எண்ணமாகும். இது மிகவும் கடினமானப் பணியாகும். எனினும், இதை அவசர கதியில் அணுகாமல்,  மிகவும் கவனத்தோடு கையாண்டுவருகிறேன். 
என் முன்பாக 17 மனுக்கள் உள்ளன. இதில் 2 தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுக்கள். இவைதவிர, 15 மனுக்கள் ராஜிநாமா கடிதங்கள்.  இந்த 15 பேரையும் தகுதிநீக்கம் செய்யக்கோரியும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. 
இவற்றில் முதலாவதாக, ராணேபென்னூர் தொகுதி கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதாகட்சி எம்எல்ஏ ஆர்.சங்கரின் மனுவை எடுத்துக் கொள்கிறேன். கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சியின் ஒரே எம்எல்ஏவாக தான் இருப்பதாகவும், அக் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிட்டதாகவும் ஆர்.சங்கர் எனக்கு கடிதம் கொடுத்திருக்கிறார். கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சியின் உறுப்பினரை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டதாக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் சித்தராமையா எனக்கு கடிதம் கொடுத்திருக்கிறார். 
கூட்டணியில் அமைச்சராகப் பதவி வகித்த ஆர்.சங்கர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார். அக் கடிதத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவை தான் திரும்பப் பெறுவதாகவும்,  பாஜக ஆட்சி அமைந்தால் அதற்கு தனது ஆதரவை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அந்தக் கடிதத்தை ஆளுநர் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். 
அதன் பின்னணியில் ஆர்.சங்கரை தகுதிநீக்கம் செய்யக் கோரி சித்தராமையா எனக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்.  நாங்கள் அனுப்பிய நோட்டீஸின்படி நேரில் விசாரணைக்கும் ஆர்.சங்கர் ஆஜராகவில்லை. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி ஆர்.சங்கரை 15-ஆவது கர்நாடக சட்டப்பேரவையின் உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.  இவர், 15-ஆவதுசட்டப்பேரவையில் மீண்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
அடுத்ததாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி, டாக்டர்.உமேஷ் ஜாதவ், பி.நாகேந்திரா ஆகிய 4 பேர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சித்தராமையா 2019, பிப்.11-ஆம் தேதி புகார் மனு கொடுத்திருந்தார். 
இதனிடையே, உமேஷ் ஜாதவ், பி.நாகேந்திரா மீதான நடவடிக்கைகளைக் கைவிடுமாறு சித்தராமையா கடிதம் கொடுத்ததால்,  ஏற்கெனவே கொடுத்த புகார் மனு கைவிடப்பட்டது.  ஆனால், ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி மீதான புகார் மனுக்கள் நிலுவையில் இருந்தன.இதனிடையே, ஜூலை 6-ஆம் தேதி வேறுசில எம்எல்ஏக்களுடன் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ்குமட்டஹள்ளி இருவரும் தங்களது ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்தனர்.  இவை தன்னிச்சையாகவும், உண்மையாகவும் கொடுக்கவில்லை என்று நான் கருதுவதால்,  இவர்களின் ராஜிநாமா கடிதங்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளேன். 
மேலும், சித்தராமையா அளித்த புகார் மனுவின் அடிப்படையில்,  கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி கோகாக் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி, அதானி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மகேஷ் குமட்டஹள்ளி ஆகியோரின் எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன். இவர்களும் 15-ஆவது சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
எனது உத்தரவுகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. 15-ஆவது சட்டப்பேரவையின் பதவிக் காலம் 2023-ஆம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது.  அதுவரை தகுதிநீக்கம் செய்யப்பட்ட 3 பேரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட  முடியாது.  ஆனால், 16-ஆவது சட்டப்பேரவைக்கு நடத்தப்படும் தேர்தலில் போட்டியிடலாம்.  எஞ்சியுள்ள எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் மற்றும் தகுதிநீக்கக் கோரும் புகார் மனுக்கள் மீது சில நாள்களில் நடவடிக்கை எடுப்பேன்.
நான் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக 3 பேரும் நீதிமன்றத்தை அணுகத் தடையேதுமில்லை. 
புதிய அரசு பதவியேற்றாலும், நான் பேரவைத் தலைவராகத் தொடர்வேன். நான் ராஜிநாமா கொடுத்தால் மட்டுமே புதிய பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும்.  ஒருவேளை, புதிய அரசுக்கு என்னை மாற்ற வேண்டுமென்றால், என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து,  வாக்களித்து என்னை நீக்கலாம். அதன்பிறகு புதிய பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com