மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜூலை 28-இல் ராம்நாத் கோவிந்த் பயணம்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 28-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜூலை 28-இல் ராம்நாத் கோவிந்த் பயணம்


மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 28-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூலை 28-ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் தலைவராக பதவியேற்றபின், இந்த நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது, இந்தியா மற்றும் மேற்கண்ட நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதலில் பெனின் நாட்டுக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த், ஜூலை 29-ஆம் தேதி அந்நாட்டு அதிபர் பாட்ரிஸ் தலோனுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருக்கும் அவர், அங்கு வாழும் இந்தியர்களைச் சந்தித்து உரையாற்றவுள்ளார்.
அங்கிருந்து ஜூலை 30-ஆம் தேதி காம்பியாவுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார். அதற்கடுத்த நாளில் அந்நாட்டு அதிபர் அடாமா பாரோவைச் சந்தித்து பேசவுள்ளார். அதன் பின், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிவிட்டு, காம்பியாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் அந்நாட்டில் மகாத்மா காந்தி மற்றும் காதி பொருள்கள் தொடர்பான கண்காட்சியை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
இறுதியாக, கினியாவுக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அங்கு இந்தியர்கள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com