காங்கிரஸ் தலைமை குறித்த தெளிவின்மை கட்சியை பாதிக்கிறது: சசி தரூர்

ராகுல் காந்தியின் ராஜிநாமாவைத் தொடர்ந்து காங்கிரஸின் தலைமை குறித்து தெளிவற்ற சூழல் நிலவுவது கட்சியை பாதித்து வருவதாக மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமை குறித்த தெளிவின்மை கட்சியை பாதிக்கிறது: சசி தரூர்

ராகுல் காந்தியின் ராஜிநாமாவைத் தொடர்ந்து காங்கிரஸின் தலைமை குறித்து தெளிவற்ற சூழல் நிலவுவது கட்சியை பாதித்து வருவதாக மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

கட்சியில் இப்போது காணப்படும் நிலைமை அதிருப்தியளிக்கிறது. காங்கிரஸில் உள்ள நாங்கள் தற்போது சந்தித்து வரும் தர்மசங்கடமான நிலைக்கு தெளிவான பதில் இல்லை. ராகுல் காந்தியின் ராஜிநாமாவைத் தொடர்ந்து காங்கிரஸின் தலைமை குறித்து தெளிவற்ற சூழல் நிலவுவது கட்சித் தொண்டர்களையும் அனுதாபிகளையும் பாதித்து வருகிறது.

முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், அனைவரையும் இணைத்து முன்னெடுத்துச் சென்று உத்வேகமளிக்கவும் கட்சிக்கு தலைவர் இல்லை என்தை அனைவரும் உணர்கின்றனர். தற்போதைய நிலைமையை காங்கிரஸ் காரியக் கமிட்டி மிகத் தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்றும், மேலும் தாமதமின்றி தீர்வு காண தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் நம்புகிறேன்.

கட்சிக்கு இடைக்கால செயல் தலைவர் ஒருவரைத் தேர்வு செய்வது என்பது, காரியக் கமிட்டியின் முன் உள்ள ஒரு வாய்ப்பாகும். அதன் பின் காரியக் கமிட்டியைக் கலைத்து விடலாம். அதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவி மற்றும் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களை, கட்சியின் தலைவர், நிர்வாகிகள் போன்ற பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் கட்சியை வழிநடத்த வழிவகை பிறக்கும்.

பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி போன்றதொரு தேர்தலை காங்கிரஸ் நடத்தி புதிய தலைவரைத் தேர்வு செய்யலாம். அதன் மூலம் கட்சியில் தேசிய நலனை அதிகரித்து மீண்டும் பெருவாரியான வாக்காளர்களை கட்சியை நோக்கி ஈர்க்கச் செய்யலாம்.

ஓர் இளம் தலைவர்தான் கட்சியை வழிநடத்த மிகவும் பொருத்தமானவர் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறிய கருத்து சரியானதுதான். தற்போதைய கட்சியின் நிலை மற்றும் தேசிய நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் கட்சித் தலைமைக்கு யார் புதிதாக வந்தாலும் அவர்கள் இரட்டை இலக்குகளை சாதிக்க வேண்டியிருக்கும். அதாவது தொண்டர்களுக்குப் புத்துணர்வூட்டுவதும், காங்கிரûஸ நோக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதும்தான் அந்த இரட்டை இலக்குகள்.

கட்சி நிர்வாகம் மட்டுமே தெரிந்த ஒருவர் தலைவராக வரும்பட்சத்தில் அவரால் தொண்டர்களுக்கு புத்துணர்வூட்ட முடியும். ஆனால் அவரால் வாக்காளர்களை கட்சியின் பக்கம் ஈர்க்க முடியாமல் போகலாம்.

அதேபோல் மக்கள் மத்தியில் கவர்ச்சிகரமான பிரபலமாக இருப்பவர் தலைவராக வந்தால், அவர் தேர்தலில் மக்களை ஈர்ப்பவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு கட்சி நிர்வாகிகள் முழுமையான ஆதரவை அளிக்க முடியாத நிலை தோன்றலாம். 

இந்தச் சூழலில் இளம் தலைவர் ஒருவரால் இந்த இரு பொறுப்புகளையும் சிறப்பாக வகிக்க முடியும். கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்படும்போது பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று நம்புகிறேன்.
பிரியங்காவை அவரது பாட்டியும் கட்சியின் முன்னாள் தலைவருமான இந்திரா காந்தியுடன் பலரும் ஒப்பிட்டுள்ளனர். அவரிடம் இயல்பாகவே உள்ள அந்த வசீகரிக்கும் தன்மையானது, கட்சித் தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் புத்துணர்வை அளிக்கும். பிரியங்காவுக்கு சிறந்த நிர்வாக அனுபவமும் உள்ளது. அவர் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக உள்ளார். 

அதே வேளையில் தனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தலைவர் பதவிக்கு வரக் கூடாது என்று ராகுல் காந்தி கூறியிருப்பது பிரியங்காவை இப்போட்டியில் இருந்து வெளியே நிறுத்துகிறது. இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை சோனியா காந்தி குடும்பம்தான் தீர்மானிக்க வேண்டும். 

எப்படி இருந்தாலும் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும். கட்சித் தலைவர் பதவியை ஏற்க எனக்கு விருப்பமா என்று கேட்கிறீர்கள். இதற்கு தொலைதூரத்தில் வாய்ப்பு இருப்பதாகக் கூட நான் நினைக்கவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com