
கட்சித் தாவினால் பதவி பறிபோகும் என புதுவை எம்எல்ஏக்களுக்கு முதல்வர் வே.நாராயணசாமி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாஜக தலா ரூ. 30 கோடி அளிக்க முன்வந்து பேரம் பேசியதாகவும், அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அந்த மாநில சட்டப்பேரவையில் பேசியுள்ளனர்.
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, பேரம் பேசுவது, ராஜிநாமா செய்ய வைப்பது போன்ற செயல்கள் கர்நாடகத்தில் மட்டுமன்றி, பல மாநிலங்களில் பாஜக செய்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜகவினர் இவ்வாறு செய்துள்ளனர். குறிப்பாக, கோவாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இது நீண்ட நாள் நீடிக்காது.
கர்நாடக மாநிலத்தில் 17 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து, சட்டப்பேரவைத் தலைவர் எடுத்துள்ள முடிவு கட்சித் தாவும் எம்எல்ஏக்களுக்கு ஒரு பாடமாகும். மொத்த எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கட்சி மாறினால்தான் அங்கீகரிக்க முடியும். அதற்கு கீழ் கட்சி மாறினால் பதவி பறிபோகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு உண்டு. இது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், எடுக்கப்பட்ட நடவடிக்கை. இது மற்ற மாநிலங்களில் கட்சித் தாவ நினைக்கும் எம்எல்ஏக்களுக்கும் ஒரு பாடம்.
யார் கட்சியை விட்டு விலகினாலும் பதவி பறிபோகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எந்தக் காலத்திலும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என குமாரசாமி கூறியுள்ளார்.
நாட்டில் லாபகரமாக இயங்கி வரும் 14 விமான நிலையங்களில் 6 விமான நிலையங்களைப் பராமரிக்கும் பணியை அதானி குழுமத்துக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்து, ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் பராமரிப்பை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக நீதி ஆயோக் மற்றும் மத்திய நிதி அமைச்சகம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. விமான நிலைய பராமரிப்புச் செலவுகளை ஏற்க வேண்டும். அந்தச் செலவுகளை மேற்கொள்ளும் அளவு வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டும், இந்தத் தகுதிகள் இருந்தாலும்கூட ஒரு நபருக்கோ, ஒரே நிறுவனத்துக்கோ இரண்டுக்கும் மேற்பட்ட விமான நிலையங்களைப் பராமரிக்கும் பணியை வழங்கக் கூடாது.
ஆனால், இந்த விதிமுறைகளை மீறி, 6 விமான நிலையங்களைப் பராமரிக்கும் பணியை மத்திய அரசு, அதானி குழுமத்துக்கு வழங்கியுள்ளது.
இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பும் என்றார் நாராயணசாமி.