
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இது தொடர்பாக, காவல் துறைத் துணைத்தலைவர் (டிஐஜி) சுந்தர்ராஜ் கூறியதாவது:
சுக்மா மாவட்டத்தின் கன்ஹாய்குடா கிராமத்திலுள்ள வனப்பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் திங்கள்கிழமை காலை 7 மணியளவில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குப் பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, அவர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், நக்ஸல் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பெண் தீவிரவாதி ஆவார்.
அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்றார் டிஐஜி சுந்தர்ராஜ்.
பெண் நக்ஸல் சுட்டுக்கொலை: மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் பெண் நக்ஸல் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இது தொடர்பாக, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்சிரோலி மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸல் தீவிரவாதிகளுக்குமிடையே திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் நக்ஸல் ஒருவர் பலியானார் என்று தெரிவித்தார்.