
கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களில் 2 பேர், தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆட்சியை பிடித்தது. அந்த மாநில சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து, பேரவைத் தலைவர் பதவியிலிருந்து கே.ஆர்.ரமேஷ் குமார் விலகினார்.
முன்னதாக, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரமேஷ் எல் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி, சுயேச்சை எம்எல்ஏ ஆர்.சங்கர் ஆகியோரை கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்து, கே.ஆர்.ரமேஷ் குமார் கடந்த வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 11 அதிருப்தி எம்எல்ஏக்கள், மஜதவின் 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்,
இந்நிலையில், தங்களை தகுதிநீக்கம் செய்து, பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, காங்கிரஸைச் சேர்ந்த ரமேஷ் எல் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்குரைஞர் சுப்ரன்ஷு பதி தாக்கல் செய்த அந்த மனுவில், கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி ஜூலை 25 வரை நடைபெற்ற நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: எங்களது (ரமேஷ் எல் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி) ராஜிநாமா கடிதங்களை, பேரவைத் தலைவர் நிராகரித்தது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகும். இது, அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. எங்களது ராஜிநாமா கடிதங்கள் நிராகரிப்பு, தகுதிநீக்கம் ஆகியவை தொடர்பாக பேரவைத் தலைவர் மேற்கொண்ட நடைமுறைகள் தொடர்பான அனைத்து கோப்புகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவில், கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஆர்.சங்கர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யவிருக்கிறார். மேலும், மனுதாரர்களின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, அவசர வழக்காக விசாரிக்க கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.