
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் நடத்திய குண்டுவீச்சில் காயமடைந்த குழந்தை உயிரிழந்தது. பிறந்து 10 நாள்களே ஆன குழந்தை உயிரிழந்திருப்பது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் ஞாயிற்றுக்கிழமை சரமாரியாக மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஷான்பூர் பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஜேன் (35), பிறந்த 10 நாள்களே ஆன அவரது குழந்தை, முகமது ஆரிஃப் (40) ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்கள் உடனடியாக பூஞ்ச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் ஜம்மு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும், அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மற்ற இவருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் குண்டு வீச்சில் கைக்குழந்தை உயிரிழந்தது அந்தக் குடும்பத்தினரை மட்டுல்லாது, அப்பகுதி மக்களையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தியத் தரப்பும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்தும், வீடுகளை நோக்கியும் பாகிஸ்தான் தரப்பு ராக்கெட் குண்டுகளை வீசுகிறது. இதனால் பல உயிரிழப்புகளும், உடல் ஊனமடைவது அதிகம் நிகழ்கிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணி வரை இரவு 10 மணி வரை இந்திய எல்லைப் பகுதி கிராம மக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பல வீடுகளும் இடிந்து தரைமட்டமாயின.
இதற்கு பதிலடியாக இந்தியாவும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தியது. எனினும், பாகிஸ்தான் தரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.