
நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் சிறப்பாகச் செயல்பட உதவுவதற்காக, ஐஐஎம், ஐஐஎஸ்சி உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 40 மாணவர்களை அக்கட்சி நியமித்தது தற்போது தெரியவந்துள்ளது.
புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கடந்த மாதம் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் பாஜக எம்.பி.க்கள் சிறப்பாகச் செயலாற்றுவதற்காக பெங்களூரில் உள்ள ஐஐஎம், ஐஐஎஸ்சி, தேசிய சட்ட பல்கலைக்கழகம், தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்களில் இருந்து 40 மாணவர்கள், எம்.பி.க்களுக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பாஜகவின் நாடாளுமன்ற செயலர் பாலசுப்ரமணியம் திங்கள்கிழமை கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் எம்.பி.க்களுக்கு உதவியாக 40 மாணவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கு தயார் செய்து வருவதால், அவர்களுக்கும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பயிற்சிக்காக, பல்வேறு துறைகளில் இருந்து சுமார் 600 பேர் விண்ணப்பித்திருந்தனர். பல கட்ட தேர்வுகளுக்கு பின்னர் அவர்களில் இருந்து 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நடப்பு கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் பேசுவதற்காகவும், அவை நடவடிக்கைகளில் ஆர்வமுடன் பங்கேற்பதற்காகவும் இந்த மாணவர்கள் பல ஆய்வுகள் செய்தனர். பல்வேறு தளங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்து எம்.பி.க்களுக்கு பயனுள்ள கருத்துகளை தெரிவித்தனர். அது எம்.பி.க்களின் சிறப்பான அவை நடவடிக்கைகளில் தெரிந்தது.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின் போதும், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் எம்.பி.க்கள் விவாதங்களில் பங்கேற்பதற்கு இந்த மாணவர்கள் மிகவும் உதவியாக இருந்தனர் என்று கூறினார்.