
தொழிலதிபர் மல்லையாவுக்குத் தொடர்புடைய புதிய போலி நிறுவனம் ஒன்றை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. இதுதொடர்பாக அவருக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவருக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்திய வங்கிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார் மல்லையா.
இவரை நாடு கடத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
பெங்களூரைச் சேர்ந்த வி.சசிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் போலி நிறுவனத்தின் மூலம் விஜய் மல்லையாவுக்கு பணம் பரிவர்த்தனை செய்வதாக புகார் கிடைத்தது. அதன்பேரில், சசிகாந்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மல்லையா குழுமத்தில் சசிகாந்த், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுமார் 9 ஆண்டுகளுக்கு பணிபுரிந்துவந்துள்ளார்.
யுனைடெட் புரூவரீஸ் ஹோல்டிங் லிமிடெட் (யுபிஹெச்எல்) நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் அவர் இருந்து வருகிறார்.
யுனைடெட் புரூவரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளில் 10.72 சதவீதத்தை யுபிஹெச்எல் வைத்திருந்தது.
யுனைடெட் பிராண்டிங் வேல்டுவைட் (யுபிடபிள்யூ) என்ற பெயரில் பெங்களூரில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் பங்குதாரர்களாக
சசிகாந்தின் மனைவி ஜெயந்தி, மகள் அர்சிதா ஆகியோர் உள்ளனர்.
யுபிஹெச்எல் நிறுவனத்தை யுபிடபிள்யூ நிர்வகிக்கத் தொடங்கியது. பீர், ஷூக்களை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம், 60 சதவீத ஏற்றுமதியை துபையில் இருக்கும் டாம்மி இன்டர்நேஷனல் என்று நிறுவனத்துக்கு செய்து வந்தது.
அந்த நிறுவனத்தில் சசிகாந்தின் மகள் மிக முக்கியமான பங்குதாரர்களில் ஒருவராக அங்கம் வகித்து வருகிறார்.
இந்த நிறுவனத்திலிருந்து போலி நிறுவனங்கள் வழியாக மல்லையாவுக்கு பணம் அனுப்பப்பட்டு வரலாம் என்று அமலாக்கத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, விதிமுறைகளை மீறியதாக புகாரை எதிர்கொண்டுள்ள கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளைத் தவிர, எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் சொந்தமான வேறு எந்த நிறுவனங்களின் சொத்துகளையும் முடக்கக் கூடாது என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு வரும் 2ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.