
முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களைத் தடுப்பதற்கான மசோதா, மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா மக்களவையில் கடந்த 24-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த மசோதா மூலம், தனியார் நிறுவனங்கள் தங்கள் டெபாசிட் திட்டங்கள் குறித்து விளம்பரம் கொடுப்பது, கட்டுப்பாடு எதுவுமின்றி அதிக அளவிலான தொகையை பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டுகளாகப் பெறுவது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது.
நாட்டிலுள்ள பல மாநிலங்களில், தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகக் கூறி, பொது மக்களிடமிருந்து டெபாசிட் பெறுவதும், பின்னர் மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றுவதும் அதிகரித்து வருகிறது. இதனால், ஏழை மக்களும், நடுத்தரக் குடும்பங்களுமே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கும், மக்களிடம் டெபாசிட் பெற்று மோசடியில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கவும் போதுமான சட்டப்பிரிவுகள் இல்லாத நிலையே காணப்பட்டது.
இதையடுத்து, தனியார் நிதி நிறுவனங்கள் மக்களிடமிருந்து டெபாசிட் பெறுவதைத் தடுக்கும் நோக்கில், முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடுப்பு மசோதா, 2019 மக்களவையில் கடந்த 19-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்களவை எம்.பி.க்கள் கடந்த 24-ஆம் தேதி ஒப்புதல் அளித்தனர்.
இந்த மசோதாவில், மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், டெபாசிட்டாகப் பெற்ற பணத்தை முதலீட்டாளர்களிடம் முறையாகத் திருப்பியளிப்பதற்குமான வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அதே வேளையில், தனிப்பட்ட காரணங்களுக்காக உறவினர்களிடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ பணம் பெறுவதற்கு இந்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கும் அதிகாரம்: இதையடுத்து, இந்த மசோதாவானது மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் பேசியதாவது:
நிதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, நாடு முழுவதும் 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஏழை மக்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தைக் காக்கும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனம் என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணத்தை மீட்க இந்த மசோதா வழிவகுக்கும். தனியார் நிதி நிறுவன மோசடிகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, பல்வேறு அமைச்சகங்களைக் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களைத் தடுப்பதற்குத் தேவையான விதிமுறைகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த மசோதா அதிகாரமளித்துள்ளது. எனவே, இந்த மசோதாவுக்கு எம்.பி.க்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார் அனுராக் தாக்குர்.
ஒருமனதாக ஆதரவு: இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. கே.சி. ராமமூர்த்தி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அகமது ஹாசன், திமுக எம்.பி. பி.வில்சன், அதிமுக எம்.பி. ஏ.நவநீத கிருஷ்ணன், பாஜக எம்.பி. அஜய் பிரதாப் சிங், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. வி.விஜய் ரெட்டி, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. நாரியன் தாஸ் குப்தா உள்ளிட்டோர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக இந்த மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும், இந்த மசோதாவானது சட்டவடிவு பெறும்.