
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சாகச நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான முக்கிய காரணங்கள் குறித்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அந்த நிகழ்ச்சியில் மோடி பேசியுள்ளார்.
மோடி பங்கேற்கும் இந்த சிறப்பு நிகழ்ச்சி உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான மேன் வெர்சஸ் வைல்டு எனும் இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். யாரும் இல்லாத காடு, மலை, வனப்பகுதியில் பியர் கிரில்ஸ் இறக்கி விடப்படுவார். அந்த வனத்தில் தனியாளாக எவ்வாறு தன்னைக் காத்து, தனக்கான உணவை தேடி உண்டு, உயிர் வாழ அவர் முயற்சிக்கிறார் என்பது தொடர்பாக அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும். இந்த சாகச நிகழ்ச்சி உலகம் முழுவதும் புகழ்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றுள்ளார். உத்தரகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பியர் கிரில்ஸும், பிரதமர் மோடியும் இந்த சாகசத்தை தொடங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டக் காட்சி திங்கள்கிழமை வெளியானது.
இது குறித்து மோடி கூறியதாக டிஸ்கவரி தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் மலையிலும், வனத்திலும் உள்ள இயற்கை அழகோடு பல ஆண்டுகளாக வாழ்ந்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக இயற்கையை கண்டு ரசிக்கக் கூட எனக்கு நேரமில்லை. அதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு எனக்கு கோரிக்கை விடுத்தபோது, உடனடியாக ஒப்புக் கொண்டேன். எனது வாழ்க்கையில் அரசியல் தவிர மற்றவற்றுக்கும் உள்ள பங்கு குறித்து தெரிவித்துள்ளேன் .
இந்தியாவின் சிறந்த சுற்றுச்சூழலையும், அதை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அனைவருக்கும் தெரியப்படுத்தும் வாய்ப்பாக இந்த சிறப்பு நிகழ்ச்சி இருக்கும். நீண்ட நாள்களுக்கு பிறகு வனத்தில் இயற்கையோடு இணைந்திருந்தது மிகச்சிறந்த அனுபவம். இயற்கை குறித்து மிகுந்த அனுபவம் வாய்ந்த பியர் கிரில்ஸுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மோடியின் தெரியாத பக்கம்
பியர் கிரில்ஸ் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், உலகின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவருடன் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை குறித்து இதுவரை தெரியாத பக்கத்தை அனைவரும் காணப்போகிறீர்கள்.
இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்தும், அதை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் மோடி கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சிறப்பு நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சியையும் அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.