
நாடு முழுவதும் உள்ள வக்ஃபு வாரியத்தின் சொத்துகள் 100 நாள்களில் 100 சதவீதம் டிஜிட்டல்மயமாக்கப்படும் என்று சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மத்திய வக்ஃபு வாரியக் கவுன்சிலின் தேசிய மாநாடு, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, நக்வி பேசியதாவது:
வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை அந்த அமைப்பு பாதுகாப்புடன் வைத்திருப்பதையும், உரிய முறையில் நிலம் பயன்படுத்தப்படுவதையும் அந்த அமைப்பே உறுதி செய்ய வேண்டும். 100 நாள்களில் வக்ஃபு வாரியத்தின் சொத்து விவரங்கள் 100 சதவீதம் டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்கப்படும்.
20 மாநில வக்ஃபு வாரியங்களுக்கு விடியோ வாயிலாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்காக வசதி செய்து தரப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள வக்ஃபு வாரியங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வசதி செய்து தரப்படும். வக்ஃபு வாரியத்தின் நிலத்தில் செயல்பட்டுவரும் பள்ளிகள், கல்லூரிகள், ஐடிஐ நிறுவனங்கள், பாலிடெக்னிக், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த 100 சதவீத நிதியுதவி பிரதமரின் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
சுதந்திரத்துக்கு பிறகு இதுபோன்றதொரு திட்டம் கொண்டுவருவது இதுவே முதல்முறையாகும் என்று நக்வி பேசினார். சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை செயலர் ஷைலேஷ், மத்திய வக்பு கவுன்சில் செயலர் மற்றும் தலைவர்கள், மாநில வக்ஃபு வாரியங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.