மேற்கு வங்கம்: முகுல் ராய்க்கு எதிராக கைது ஆணை

மேற்கு வங்க மாநில பாஜக மூத்த தலைவரான முகுல் ராய்க்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள நடுவர் நீதிமன்றம் கைது ஆணை (அரெஸ்ட் வாரண்ட்) வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கம்: முகுல் ராய்க்கு எதிராக கைது ஆணை


மேற்கு வங்க மாநில பாஜக மூத்த தலைவரான முகுல் ராய்க்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள நடுவர் நீதிமன்றம் கைது ஆணை (அரெஸ்ட் வாரண்ட்) வெளியிட்டுள்ளது.
புர்ராபஜார் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி நபர் ஒருவரிடம் இருந்து ரூ.19 லட்சம் பணத்தை வாங்கியது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரின் செல்லிடப்பேசியை போலீஸார் பரிசோதித்தபோது, அதில் முகுல் ராயின் செல்லிடப்பேசி எண் பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராகக்கோரி, முகுல் ராய்க்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
ஆனால் போலீஸார் முன்பு முகுல் ராய் ஆஜராகவில்லை. அதற்குப் பதிலாக போலீஸாரின் நோட்டீஸை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புர்ராபஜார் காவல்நிலையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கு விசாரணைக்கு முகுல் ராய் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த மனுவை கொல்கத்தா நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது முகுல் ராய்க்கு எதிராக கைது ஆணையை நீதிமன்றம் வெளியிட்டது.
மம்தா மீது முகுல் ராய் விமர்சனம்: இதனிடையே, கொல்கத்தா நீதிமன்றம் தமக்கு எதிராக கைது ஆணை வெளியிட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகுல் ராய், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். அவர் மேலும் கூறுகையில், என்னையும், பாரக்பூர் தொகுதி பாஜக எம்.பி. அர்ஜுன் சிங்கையும் குறிவைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படுகிறார். நாங்கள் இருவரும் கைது செய்யப்பட்டால், மேற்கு வங்கத்தில் அமைப்பு ரீதியில் பாஜக பலவீனப்படும் என்று அவர் கருதுகிறார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com