ஜம்மு-காஷ்மீர் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்: ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவுறுத்தல்

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவுறுத்தியுள்ளார்.
சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்


ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 60,000 வீரர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணிக்காக சுமார் 20,000 வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை காஷ்மீருக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
இது தவிர, மாநில அரசும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் ஜம்மு-காஷ்மீர் தொடர்பாகப் பல உத்தரவுகளை வழங்கி வருகின்றன. ஸ்ரீநகரில் உள்ள மசூதிகளின் எண்ணிக்கையையும், அதை நிர்வகித்து வருபவர்களின் விவரங்களையும் அளிக்குமாறு பிராந்திய காவல் துறை அதிகாரிகளுக்கு மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நடவடிக்கைகளால், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் படி ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தும், பிரிவு 35ஏ-வின்படி மாநில மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளும் நீக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே காணப்பட்டது. இவை தொடர்பாக, சமூக வலைதளங்களிலும் பல்வேறு செய்திகள் பரவின.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு, மாநில அரசு பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டுள்ளதாகவும், மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டதாகவும் மர்மநபர்களால் செய்திகள் பரப்பப்பட்டன.

இவை தொடர்பாக, மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
ஜம்மு-காஷ்மீர் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உத்தரவுகள் எதுவும் உண்மையில்லை. மக்கள் யாரும் அதுபோன்ற செய்திகளில் கவனம் செலுத்த வேண்டாம். அவற்றை நம்பவும் வேண்டாம். மாநிலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை; அனைத்தும் கட்டுக்குள் இருக்கின்றன. 
வேண்டுமென்றே போலியான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். மாநிலத்தில் யாராவது தும்மினால் கூட, ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வெடித்துவிட்டதைப் போல் அதை சித்திரித்து வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர் என்றார் சத்யபால் மாலிக்.
சிபிஐ விசாரணை: ஆளுநரின் கருத்து குறித்து மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், அரசு அதிகாரிகள் கையொப்பமிட்டது போன்ற உத்தரவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஆனால், இவை உண்மையில்லை என ஆளுநர் மறுக்கிறார். 
இது மிகவும் ஆபத்தான விஷயமாகும். இந்தப் போலியான உத்தரவுகள் எங்கிருந்து பரப்பப்பட்டன என்பதைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com