Enable Javscript for better performance
அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்: நிதீஷ் குமார் வலியுறுத- Dinamani

சுடச்சுட

    

    அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்: நிதீஷ் குமார் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 01st June 2019 01:28 AM  |   அ+அ அ-   |    |  

    NITISHKUMAR


    மத்திய அமைச்சரவையில்  கூட்டணி கட்சிகளுக்கு  விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவருமான நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடியு இடம் பெற்றுள்ளது. பிகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில்  தேசிய ஜனநாயக கூட்டணி  39 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதில் ஜேடியு 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அக்கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு பதவி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நிதீஷ் குமார் அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தார்.
    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பிகாருக்கு வெள்ளிக்கிழமை திரும்பியபோது அமைச்சரவையில் இடம் பெறாதது குறித்து நிதீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
    நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் அமைச்சரவையில் எண்ணிக்கை அடிப்படையில் இடம் வழங்குவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் அமைச்சரவையில் இடம் பெற மறுத்துவிட்டோம். கூட்டணி கட்சிகளுக்கு விகிதாசார அடிப்படையில்தான் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பான கேள்விகளுக்கு இடமில்லை என்று கூறினார்.
    கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெறவில்லை. எனவே, அப்போது அமைச்சரவையில் ஜேடியு இடம் பெறவில்லை. அதையடுத்து 2017-ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் அக்கட்சி இணைந்தபோதும், அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. இந்நிலையில்,  இந்த முறையும் அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பை ஐக்கிய ஜனதா தளம் இழந்து விட்டது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp