புதிய தேசிய கல்வி கொள்கை பள்ளிக் கட்டணக் கொள்ளையைத் தடுக்குமா?

புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை ஒப்புதலைப் பெற்றால், தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகக் கட்டணங்களை உயர்த்தி கொள்கையடிக்கும் செயல் தடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கை பள்ளிக் கட்டணக் கொள்ளையைத் தடுக்குமா?


புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை ஒப்புதலைப் பெற்றால், தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகக் கட்டணங்களை உயர்த்தி கொள்கையடிக்கும் செயல் தடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை நிபுணர்கள் குழுவானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வழங்கியுள்ளது. 

தேசிய கல்வி ஆணையத்தை அமைப்பது, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்துவதை தடுப்பது போன்றவை அந்தப் பரிந்துரைகளில் அடங்கும். 

கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு, புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்கிடம் சமர்ப்பித்தது. 

அந்த நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

நாட்டில் உள்ள கல்வியமைப்பின் தொலைநோக்குப் பார்வையை தொடர்ச்சியாக, அதே சமயம் நிலையாக மேம்படுத்துதல், அமல்படுத்துதல், மதிப்பிடுதல், திருத்துதல் போன்றவற்றை செய்யக் கூடிய வகையிலான புதிய உச்ச அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும். அதை ராஷ்ட்ரீய சிக்ஷா ஆயோக் அல்லது தேசிய கல்வி ஆணையம் என்று குறிப்பிடலாம். 

அதேபோல், கல்வி மற்றும் கற்றலில் கவனத்தை மீட்டெடுக்கும் வகையில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயரை மீண்டும், கல்வி அமைச்சகம் என மாற்றலாம். 

தனியார் பள்ளிகள் தங்களின் கட்டண அமைப்பை சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால், அவை தன்னிச்சையாக கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது. பள்ளி மேம்பாட்டு நிதி, உள்கட்டமைப்பு நிதி என்ற பெயரில் கல்விக் கட்டணத்தில் எந்தவொரு கணிசமான உயர்வும் இருக்கக் கூடாது. 

கட்டண அதிகரிப்பு சதவீதத்தை, மாநில பள்ளிகள் ஒழுங்குமுறை ஆணையம் (எஸ்எஸ்ஆர்ஏ) என்ற புதிய ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிர்ணயிக்கும். பொருளாதார நிபுணர் சாணக்யா, கணித மேதை பானினி, வானியல் ஆராய்ச்சியாளர் ஆரியபட்டா போன்றோர் பயின்ற பழங்கால பல்கலைக்கழகங்களான தட்சஷீலம் மற்றும் நாளந்தாவின் பிரபல பட்டதாரிகள், ஆராய்ச்சியாளர்கள் குறித்த கல்வி சேர்க்கப்படலாம் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கின்றன.

இதன்படி பார்த்தால் பள்ளிகள் தன்னிக்கையாக ஆண்டுதோறும் பள்ளிக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்வது தடுத்து நிறுத்தப்படும் என்று கருதப்படுகிறது.

மேற்கண்ட அம்சம் எந்த மாற்றமும் இல்லாமல் அனுமதி பெற்றாலும், அதனை எவ்வாறு மத்திய அரசு செயல்படுத்தும் என்பதை பொறுத்து, கல்விக் கட்டணக் கொள்ளையில் இருந்து பெற்றோர் தப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com