கேரளத்தில் நிபா வைரஸ்  பாதிப்பு உறுதியானது: மத்தியக் குழு அனுப்பிவைப்பு

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் நிலவும் சூழலை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.
 கேரளத்தில் நிபா வைரஸ்  பாதிப்பு உறுதியானது: மத்தியக் குழு அனுப்பிவைப்பு


கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் நிலவும் சூழலை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.
கேரளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது ரத்த மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேயிலுள்ள தேசிய வைரஸ் ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை அந்த ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இது தொடர்பாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:


கொச்சியிலுள்ள கலமச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை தேசிய வைரஸ் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, அந்த மாணவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. கடும் காய்ச்சல் காரணமாக அவர் அவ்வப்போது அவதிப்பட்டு வருகிறார். மற்றபடி, அவசர சிகிச்சைகள் அளிக்கும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசமடையவில்லை. அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம்.
அந்த மாணவருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் என 311 பேர் மருத்துவ ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் வைரஸ் தாக்குதல் ஏதும் உள்ளதா என்ற நோக்கில், அனைவரையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அவர்களில் ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சை அளித்த 3 செவிலியர்களும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கலமச்சேரி மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அச்சம் தேவையில்லை: நிபா வைரஸ் பாதிப்பு குறித்து பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு கோழிக்கோடில் நிபா வைரஸ் பரவியபோது, மாநில அரசு அதைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றது. அதேபோல், தற்போதும் வைரஸ் பரவுவது தடுத்து நிறுத்தப்படும். வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள நிபா வைரஸ் எதிர்ப்பு மருந்து, விரைவில் மாநிலத்துக்கு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் உறுதியளித்துள்ளார் என்று சைலஜா தெரிவித்தார்.

எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிப் பிரிவில் பாதுகாப்பு கவசங்களுடன் மருத்துவர்கள்.
எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிப் பிரிவில் பாதுகாப்பு கவசங்களுடன் மருத்துவர்கள்.


மத்திய குழு: நிபா வைரஸ் பாதிப்பைக் கண்டறியவும், சிகிச்சை முறைகளை மேற்பார்வையிடவும் 6 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக, ஹர்ஷ் வர்த்தன் கூறுகையில், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளிக்கிறேன். வெளவால்களில் நிபா வைரஸின் தாக்கம் இருக்கிறதா என்பதை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். எனவே, வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
புது தில்லியிலுள்ள தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தில், நிபா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள தனிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
 மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் கடந்த ஆண்டு மே மாதம் பழந்தின்னி வெளவால்களில் இருந்து பரவிய நிபா வைரஸுக்கு 17 பேர் உயிரிழந்தார். மலப்புரம் மாவட்டத்தில் 14 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். 

அறிகுறிகள்
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, வாந்தி, தொண்டை வலி ஆகியவை முதலில் ஏற்படும். பின்னர், தலைசுற்றல், மயக்கநிலை, மறதி போன்றவையும் ஏற்படும். சிலருக்கு மூச்சு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் கோமா நிலைக்கு செல்லவும் அதிக வாய்ப்புள்ளது. 

சவாலுக்குத் தயார்
மாநில முதல்வர் பினராயி விஜயன் முகநூலில் வெளியிட்ட பதிவில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். மத்திய குழு கொச்சி வந்தடைந்துள்ளது. வைரஸ் பாதிப்பைத் தடுப்பதில் அவர்களின் வழிகாட்டுதல்கள் முக்கியப் பங்கு வகிக்கும். எந்தவித சவாலையும் எதிர்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இந்த விவகாரத்தில், சுகாதார அமைச்சகம் தெரிவிக்கும் வழிமுறைகளை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com