இலங்கை அதிபர், பிரதமர் மற்றும் தமிழ் தேசியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
By DIN | Published on : 09th June 2019 04:13 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

இந்திய பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இலங்கை சென்றார். மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின் இலங்கை வந்தடைந்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு விமான நிலையத்துக்கு நேரில் சென்று இந்திய பிரதமர் மோடியை வரவேற்றார்.
ஈஸ்டர் பண்டிகையின்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய தேவாலயத்துக்கச் சென்று பயங்கராத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரமதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் மோடிக்கு பாரம்பரிய வரவேற்பை அளித்தார். இதையடுத்து அங்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இணைந்து செயல்படுவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இலங்கை எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபட்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், கொழும்புவில் உள்ள இந்திய இல்லத்தில் இந்திய மக்களிடையே பிரதமர் மோடி பேசுகையில், உலகளவில் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. இதன் மொத்த பெருமையும் புலம்பெயர்ந்த இந்திய மக்களையே சேரும். ஏனென்றால் நான் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களின் வெற்றி மற்றும் பெற்று தந்த பெருமை குறித்து நிறைய கேட்டறிகிறேன். பல்வேறு விவகாரங்களில் இந்திய அரசும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஒரே கருத்துடன் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
மோடியின் வருகையை முன்னிட்டு தலைநகர் கொழும்பில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.