
எனது ஆதரவு பாஜகவுக்குத் தேவையில்லை என சுயேச்சை எம்.பி. சுமலதா தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மண்டியா தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மஜத வேட்பாளரும், முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமியை 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் நடிகை சுமலதா. இவருக்கு ஆதரவாக மண்டியா தொகுதியில் பாஜக தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. தேர்தலில் வெற்றிபெற்றதும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்து சுமலதா நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில், பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு சனிக்கிழமை நடிகை சுமலதா வருகை தந்தார். பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத மாதா உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுமலதா கூறியது:
மக்களவைத் தேர்தலில் மண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட எனக்கு பாஜக ஆதரவு அளித்தது. அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக பாஜக அலுவலகத்துக்கு வந்தேன். பாஜகவின் ஆதரவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். பாஜகவில் இணைவது குறித்து எனது தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுப்பேன். நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் இருப்பதால், எனது ஆதரவு பாஜகவுக்குத் தேவையில்லை என்றார் அவர்.