உ.பி. முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்து: பத்திரிகையாளரை ஜாமீனில் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் காணொலி வெளியிட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட
உ.பி. முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்து: பத்திரிகையாளரை ஜாமீனில் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு


உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் காணொலி வெளியிட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை ஜாமீனில் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது மனைவி ஜகீஷா அரோரா, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பிரசாந்த் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது; அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், பத்திரிகையாளர் தற்போது நீதிமன்றக் காவலில் இருப்பதால், இந்த மனுவை விசாரிக்க இயலாது என்று வாதிட்டார். பின்னர், நீதிபதிகள் கூறியதாவது:
சட்டம் தெளிவாக உள்ளது. தனிநபரின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது. அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின் அடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க இயலும். தனிநபரின் சுதந்திரம் அபகரிக்கப்படும்போது, அதைக் கைகளைக் கட்டிக்கொண்டு உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்காது.
கருத்துரிமையை அபகரிக்க முடியாது: அரசமைப்புச் சட்டம் தனிநபருக்கு அளித்துள்ள கருத்து தெரிவிக்கும் சுதந்திரமானது, புனிதமானதும் மறுக்கமுடியாததும் ஆகும். அந்தச் சுதந்திரத்தை எந்தவொரு அரசும் அபகரிக்க முடியாது. சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் தாக்குதல்களை உச்சநீதிமன்றமும் கூட எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகைய தாக்குதல்கள் சில நேரங்களில் நியாயமானதாகவும், சில நேரங்களில் நியாயமற்றதாகவும் உள்ளன. இருந்தபோதும் சட்டத்தின் அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையின்படி பார்த்தால், பத்திரிகையாளருக்கு 11 நாள்கள் நீதிமன்றக் காவல் அளித்ததே பெருங்குற்றம். சமூக வலைதளத்தில் பத்திரிகையாளர் பதிவிட்ட கருத்தை உச்சநீதிமன்றம் ஆமோதிக்கவில்லை. ஆனால், கருத்து தெரிவித்ததற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தான் எங்களுக்கு வருத்தமளிக்கிறது. அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும். 
விசாரணை தொடரும்: அவரது செய்கையினால், அவர் ஜாமீனில் விடுவிக்கப்படவில்லை. மாநில அரசின் முறையற்ற நடவடிக்கை காரணமாகவே அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். சட்டத்தின் அடிப்படையில் அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிரசாந்த் கனோஜியா, முகநூல் மற்றும் சுட்டுரை ஆகிய சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்ததாக பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்படியான காட்சி இடம்பெற்றிருந்தது. 
இதையடுத்து, முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பகிர்ந்ததாகக் கூறி, பிரசாந்த் மீது  உத்தரப் பிரதேச காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், பிரசாந்த்தை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com