முறைகேடான சொத்து விவகாரம்: கெளதம் கேதானுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை தாக்கல்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்குரைஞர் கெளதம் கேதான் மீது வரி ஏய்ப்பு, வெளிநாடுகளில் முறைகேடாகச் சொத்துகள்


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்குரைஞர் கெளதம் கேதான் மீது வரி ஏய்ப்பு, வெளிநாடுகளில் முறைகேடாகச் சொத்துகள் சேர்த்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 4 புதிய குற்றப்பத்திரிகைகளை வருமான வரித் துறையினர் தாக்கல் செய்தனர்.
வழக்குரைஞர் கெளதம் கேதான் வெளிநாடுகளில் உள்ள பல வங்கிகளில் சட்டத்துக்குப் புறம்பாகக் கணக்கு வைத்திருப்பதும், அதன்மூலம் கருப்புப் பணம் மற்றும் சொத்துகள் பலவற்றை முறைகேடாகச் சேர்த்து வைத்திருப்பதும் அமலாக்கத் துறைக்குத் தெரியவந்தது. இதையடுத்து, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் பணமோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. 
இந்நிலையில், கெளதம் கேதானுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, அவர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவற்றின் அடிப்படையில், கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கேதானுக்கு எதிராக ஏற்கெனவே 9 குற்றப்பத்திரிகைகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித் துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சிங்கப்பூரிலுள்ள வங்கிகளில் 3 சேமிப்புக் கணக்குகளைச் சட்டத்துக்குப் புறம்பாக கேதான் வைத்திருந்தது தெரியவந்தது. இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பாக இந்தியாவிலுள்ள வரி வசூலிப்பு அதிகாரிகளிடம் அவர் முறையான தகவல்களை வழங்கவில்லை. இந்த வங்கிக் கணக்குகளில் பலகோடி ரூபாய் மதிப்புக்குப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேதானிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் தற்போது புதிய குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து, கெளதம் கேதானுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகளின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com