வைர வியாபாரி ஜதின் மேத்தா மீது சிபிஐ மேலும் 2 வழக்குகள் பதிவு

மகாராஷ்டிரா வங்கியிலும், யூனியன் வங்கியிலும் ரூ.587.55 கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்து தலைமறைவாக உள்ள வைர வியாபாரி ஜதின் மேத்தா மீது, சிபிஐ சார்பில் மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மகாராஷ்டிரா வங்கியிலும், யூனியன் வங்கியிலும் ரூ.587.55 கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்து தலைமறைவாக உள்ள வைர வியாபாரி ஜதின் மேத்தா மீது, சிபிஐ சார்பில் மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இதில் மகாராஷ்டிரா வங்கியிலிருந்து ரூ.323.40 கோடியும், யூனியன் வங்கியிலிருந்து ரூ. 264.15 கோடியும் கடனாக பெற்று மோசடி செய்ததாக அந்த வங்கியின் முக்கியப் பொறுப்பாளர்கள் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த புகாரின் அடிப்படையில், வின்ஸம் டைமண்ட்ஸ் மற்றும் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் அதிபரான ஜதின் மேத்தா மீது தனித்தனியே இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. 
மகாராஷ்டிர வங்கி அளித்த புகாரின்பேரில், ஜதின் மேத்தா, நிறுவன இயக்குநர்கள் ரமேஷ் ஐ பாரிக், ரவிச்சந்திரன் ராமசாமி மற்றும் ஹரீஷ் ரதிலால் மேத்தா, ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஒபைதா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இதுவரை, ஜதின் மேத்தாவுக்கு சொந்தமான வின்ஸம் டைமண்ட்ஸ் மற்றும் ஜூவல்லர்ஸ் சார்பில் 14 வங்கி நிறுவனங்களின் கூட்டமைப்பிடம் இருந்து மொத்தம் ரூ.4,600 கோடிக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், இந்நிறுவனங்கள் அனைத்துக்கும் உத்தரவாதம் அளிப்பவராக ஜதின் மேத்தா உள்ளதால் அவரே இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், ஜதின் மேத்தா மற்றும் நிறுவனங்களின் இயக்குநர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள மும்பை, ஆமதாபாத் மற்றும் கோவை ஆகிய 3 நகரங்களில் 9 இடங்களில் சிபிஐ சார்பில் சோதனை நடைபெற்றது. 
ஜதின் மேத்தா நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இதையடுத்து, வங்கி மோசடியில் ஈடுபட்டதாக ஜதின் மேத்தா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஏற்கெனவே, ஜதின் மேத்தா மீது வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 2 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com