சுடச்சுட

    

    குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது வாயு புயல்: தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்

    By DIN  |   Published on : 13th June 2019 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gujarat

    குஜராத்தின் வெராவல் கடல் பகுதியில் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் மீனவர்கள்.


    அரபிக்கடலில் உருவான வாயு புயல், அதி தீவிர புயலாக புதன்கிழமை மாறியது. குஜராத் மாநிலம், வெராவல் மற்றும் துவாரகா இடையே வியாழக்கிழமை காலையில் இப்புயல் கரையை கடக்க உள்ளதால், கடலோர பகுதிகளில் வசிக்கும் 1.60 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
    புயல் கரையை கடக்கும்போது மிக பலத்த மழையுடன் மணிக்கு 170 கிமீ வேகத்தில் காற்று வீசும். புயல் கரையை கடந்த பிறகும் 24 மணி நேரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 52 குழுக்களும், ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோர காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் மீட்பு குழுக்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகங்கள், விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 
    10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: குஜராத்தின் கட்ச், மோர்பி, ஜாம்நகர், ஜுனாகத், தேவ்பூமி-துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், அம்ரேலி, பாவ்நகர், கிர்-சோம்நாத் ஆகிய 10 மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த 10 மாவட்டங்களுக்கும் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    15 ரயில்கள் ரத்து: புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 ரயில்களின் பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளது. வெராவல்-அம்ரேலி பயணிகள் ரயில், அம்ரேலி-ஜூனாகத் ரயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனிடையே, வாயு புயலின் தாக்கத்தால் மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
    குஜராத்துக்கு உதவத் தயார்: ஒடிஸாவில் அண்மையில் பானி புயல் தாக்கியது. அப்போது, 15 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அந்த மாநில அரசு அப்புறப்படுத்தியதால், உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது.
    இந்நிலையில், வாயு புயல் பாதிப்பை எதிர்கொண்டுள்ள குஜராத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக ஒடிஸா அரசு புதன்கிழமை தெரிவித்தது.
    இதுதொடர்பாக, குஜராத் தலைமைச் செயலர் ஜே.என்.சிங், ஒடிஸா தலைமைச் செயலர் ஏ.பி.பதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். புயல் பாதிப்புகளை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அவரிடம் ஜே.என்.சிங் கேட்டறிந்தார். அப்போது, குஜராத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக ஏ.பி.பதி தெரிவித்தார்.
    பிரதமர் அறிவுரை: பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,  குஜராத்தில் வாயு புயல் கரையை கடக்கவிருப்பதால், அரசிடமிருந்து அவ்வப்போது வெளியாகும் அறிவுறுத்தல்களின்படி மக்கள் செயல்பட வேண்டும். மக்களுக்கு எந்த பாதிப்பும் நேராமலிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
    ராகுல் வலியுறுத்தல்: இதனிடையே, வாயு புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai