சிபிஐ நோட்டீஸ்: ராஜீவ் குமார் மனு மீது ஜூலை 2இல் விசாரணை: கொல்கத்தா உயர்நீதிமன்றம்

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் சிபிஐ அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் தாக்கல் செய்த மனு மீது ஜூலை மாதம் 2ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று கொல்கத்தா

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் சிபிஐ அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் தாக்கல் செய்த மனு மீது ஜூலை மாதம் 2ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முன்னாள் காவல் ஆணையரும், மேற்குவங்க சிஐடி கூடுதல் டைரக்டர் ஜெனரலுமான ராஜீவ் குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சாரதா நிதிநிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.இந்த மனு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆஷா அரோரா முன்பு புதன்கிழமை பரிசீலிக்கப்பட்டது. அப்போது ராஜீவ் குமார் மனு மீது ஜூலை மாதம் 2ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, கொல்கத்தா உயர்நீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் அமர்வு, கைது நடவடிக்கையில் இருந்து ராஜீவ் குமாருக்கு ஜூன் 10ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை பாதுகாப்பு அளித்து கடந்த மாதம் 30ஆம் தேதி உத்தரவிட்டது. அப்போது  ராஜீவ் குமார் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் நிபந்தனை  விதித்தது.
மேலும், சிபிஐ அதிகாரி ஒருவர் ராஜீவ் குமாரின் இல்லத்துக்கு நாள்தோறும் மாலை 4 மணிக்குச் சென்று, அவரிடம் கையொப்பம் பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய முக்கிய ஆதாரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை ராஜீவ் குமார் அழித்து விட்டதாக சிபிஐ குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகும்படி ராஜீவ் குமாருக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனிடையே, ராஜீவ் குமாருக்கு கைது நடவடிக்கையில் இருந்து அளித்திருந்த பாதுகாப்பை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 17ஆம் தேதி விலக்கிக் கொண்டது. அப்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகி, பாதுகாப்பு பெறும்படி ராஜீவ் குமாரை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com