சோனியா, ராகுல் இல்லாமல் காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம்

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்காமல், கட்சியின் மூத்த தலைவர்கள் கூடி 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் குறித்து ஆலோசனை
சோனியா, ராகுல் இல்லாமல் காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம்


தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்காமல், கட்சியின் மூத்த தலைவர்கள் கூடி 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். அவரது ராஜிநாமாவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்து விட்டது. இருப்பினும் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
இதனால், கட்சியை வழிநடத்தவும், முடிவுகளை எடுப்பதற்கும் ஒரு குழுவை அமைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. நிகழாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை அந்த குழு வழிநடத்தும் என்று ஊகங்கள் வெளியாகின. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.அந்தோணி தலைமையில் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராகுலும், சோனியாவும் பங்கேற்காத இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா, ரண்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்தத் தேர்தலுக்குத் தயாராவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 
ராகுல், சோனியா பங்கேற்காமல் கூட்டம் நடைபெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அப்போது, காங்கிரஸ் மத்தியக் குழு உறுப்பினர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும், மக்களவைத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட மத்தியக் குழுவில் இருந்தவர்கள்தான். ஆனால், தேர்தல் முடிவடைந்து விட்டதால், அந்தக் குழுவும் காலாவதியாகிவிட்டது. எனவே, இது காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழு அல்ல என்று சுர்ஜேவாலா பதிலளித்தார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை காங்கிரஸ் குழுத் தலைவர்களாக யார் யார் பொறுப்பேற்பார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவை காங்கிரஸ் குழுத் தலைவர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது; இதுதொடர்பாக, அவர் முடிவெடுத்த பிறகு முறைப்படி அறிவிக்கப்படும் என்று சுர்ஜேவாலா பதிலளித்தார்.
ராகுல் தலைவராக நீடிப்பார்-சுர்ஜேவாலா
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என்று கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரிடம், ராகுல் காந்தியின் ராஜிநாமா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:  காங்கிரஸ் தலைவராக இப்போதும் ராகுல் காந்திதான் இருக்கிறார். எதிர்காலத்திலும் தலைவர் பதவியில் அவர் நீடிப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சுர்ஜேவாலா பதிலளித்தார். கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இந்தப் பதிலை சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
ரேபரேலியில் சோனியா
மக்களவைத் தேர்தலில் தன்னை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, சோனியா காந்தி புதன்கிழமை ரேபரேலி தொகுதிக்குச் சென்றிருந்தார்.

அவருடன் அவரது மகளும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்காவும் சென்றிருந்தார். இதனால், தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com