மம்தாவின் ஆட்சியில் மேற்கு வங்கம் குட்டி பாகிஸ்தான் போல மாறி வருகிறது: ஐக்கிய ஜனதா தளம் தாக்கு

மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மேற்கு வங்க மாநிலம் குட்டி பாகிஸ்தான் போல மாறி வருகிறது என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடி(யு)) கட்சி விமர்சித்துள்ளது.


மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மேற்கு வங்க மாநிலம் குட்டி பாகிஸ்தான் போல மாறி வருகிறது என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடி(யு)) கட்சி விமர்சித்துள்ளது.
மத்தியிலும், பிகாரிலும் ஆட்சியிலிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி  அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், தில்லி, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெறும் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி அண்மையில் அறிவித்தது.
இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி அண்மையில் கருத்து கூறுகையில்,  பிகாருக்கு வெளியே பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைக்கவில்லை என்று நிதீஷ் குமார் கூறியுள்ளார். இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவருக்கு எனது நன்றி எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மம்தா பானர்ஜி சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள், அவரை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி, பாஜக தொண்டர்களை நோக்கி அந்நியர்கள் எனத் தெரிவித்தார்.
இதேபோல், கொல்கத்தாவில் இருந்து பிகார் தலைநகர் பாட்னாவுக்கு பேருந்தில் வந்த பிகார் மக்களை பேருந்து ஓட்டுநர் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கினர். இதற்கு பிகார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேற்கு வங்கத்தில் ஹிந்தி பேசும் மக்கள் மீதும், பிகார் மக்கள் மீதும் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜேடி(யு) கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக்கிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: மேற்கு வங்கத்தில் நடைபெறும் சம்பவங்கள் கவலையளிக்கிறது. இந்த கருத்தை நீண்ட நாள்களாகவே ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்து வருகிறது. 
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதற்கு மம்தா பானர்ஜி ஏன் நன்றி தெரிவித்தார், நிதீஷ் குமார் குறித்து ஏன் கருத்து தெரிவித்தார் என்பது தெரியவில்லை. ஒருவேளை தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இல்லாமல், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்து போட்டியிடுவதால் அவர் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறித்து நல்ல கருத்துகளை வெளியிட்டதால், மம்தாவின் தவறுகள் சரி என்றாகி விடாது. இதை வைத்து மேற்கு வங்கத்தில் பிகார் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அந்த மாநிலத்தில் இருந்து பிகார் மக்கள் விரட்டியடிக்கப்பட்டது ஆகியவற்றை நாங்கள் மறக்க மாட்டோம். மம்தா பானர்ஜியின் கண்காணிப்பிலேயே பிகார் மக்கள், மேற்கு வங்கத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். பிகார் மாநில மக்களை விரட்டியடித்தவர்கள், மேற்கு வங்க மக்களாக இருக்க முடியாது. அவர்கள் அனைவரும் ரோஹிங்கயாக்கள் ஆவர்.
மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மேற்கு வங்க மாநிலம், குட்டி பாகிஸ்தானாக வேகமாக மாறி வருகிறது. இதை தடுப்பதற்கு மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அஜய் அலோக்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com