வக்ஃபு வாரிய நிலங்களில் பள்ளிகள் கட்ட மத்திய அரசு முழு நிதியுதவி: முக்தார் அப்பாஸ் நக்வி உறுதி

வக்ஃபு வாரிய நிலங்களில் பள்ளிகள் கட்ட மத்திய அரசு முழு நிதியுதவி: முக்தார் அப்பாஸ் நக்வி உறுதி

நாடு முழுவதும் உள்ள வக்ஃபு வாரிய நிலங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுவதற்கு மத்திய அரசு 100 சதவீதம் நிதியுதவி அளிக்கும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ்


நாடு முழுவதும் உள்ள வக்ஃபு வாரிய நிலங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுவதற்கு மத்திய அரசு 100 சதவீதம் நிதியுதவி அளிக்கும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மத்திய வக்ஃபு கவுன்சிலின் 80-ஆவது கூட்டம், தில்லியில் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: 
நாடு முழுவதும் சுமார் 5.77 லட்சம் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துகள் உள்ளன. இச்சொத்துகள் தொடர்பான ஆவணங்களை மின்னணுமயமாக்குவதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய முடியும். 
நாடு முழுவதும் உள்ள வக்ஃபு வாரிய சொத்துகளை, அந்தந்த பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வக்ஃபு நிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகள், மருத்துவமனைகள், பல்நோக்கு சமுதாய கூடங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு மத்திய அரசு 100 சதவீதம் நிதியுதவி அளிக்கும்.
சிறுபான்மையினருக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, நாடு முழுவதும் 90 மாவட்டங்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருந்தன. தற்போது 308 மாவட்டங்களுக்கு இத்திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களுக்கு நக்வி பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
வக்ஃபு சொத்துகளின் குத்தகை தொடர்பான விதிமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜாகியுல்லா கான் தலைமையிலான 5 பேர் குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வக்ஃபு வாரிய சொத்துகளை திறம்பட பயன்படுத்துவது, வக்ஃபு வாரிய விதிமுறைகளை எளிமையாக்குவது, வக்ஃபு வாரிய சொத்துகளில் நிலவும் பிரச்னைகளை தீர்ப்பது உள்ளிட்டவை தொடர்பான பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அந்த பரிந்துரைகளின் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். வக்ஃபு வாரிய சொத்துகள் தொடர்பான ஆவணங்களை மின்னணுமயமாக்கும் பணிகளுக்காக மாநில வக்ஃபு வாரியங்களுக்கு மத்திய வக்ஃபு கவுன்சில் நிதியுதவி அளித்து வருகிறது என்றார் அவர்.
முன்னதாக, சிறுபான்மையின மாணவர்கள் 5 கோடி பேருக்கு அடுத்த 5 ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று முக்தார் அப்பாஸ் நக்வி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com