
பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபலா-ஏ-இன்சானியத் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
முன்னதாக, அவரை 12 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏ அனுமதி கோரியது. ஆனால், நீதிமன்றம் 5 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த முகமது ஆரிஃப், கடந்த புதன்கிழமை துபையில் இருந்து வந்தபோது தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஃபலா-ஏ-இன்சானியத் பயங்கரவாத அமைப்பில், ஜமாத்-உத்-தாவா பயங்கரவாதி ஹபீஸ் சையதுக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
துபையில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபருடன் முகமது ஆரிஃப் அடிக்கடி தொலைப்பேசியில் பேசியதை என்ஐஏ கண்டுபிடித்தது. அந்த பாகிஸ்தான் நபருக்கும் ஃபலா-ஏ-இன்சானியத் பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவருக்கும் நேரடித் தொடர்பு உண்டு. அவர்களுடன் இணைந்து இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த முகமது ஆரிஃப் சதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது கடந்த ஆண்டே என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, துபை தப்பியோடி முகமது ஆரிஃப், அங்கு தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு ரகசியாக இந்தியா திரும்பிய அவர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
இந்த பயங்கரவாத சதி தொடர்பாக தில்லி, ஸ்ரீநகரைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.