சுடச்சுட

  

  மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: திரிணமூல் காங்கிரஸ் - பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 14th June 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kolkota1

  பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தால், கொல்கத்தா என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து நோயாளியை வியாழக்கிழமை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற உறவினர்கள்.


  மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 5-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் நடைபெறுகிறது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர்தான் இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்று பாஜக கூறியுள்ளது.
  கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக் குறைவுதான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். கடந்த சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த பயிற்சி மருத்துவர்கள் இருவரை சூழ்ந்து கொண்டு தாக்கியது. இதில் ஒரு மருத்துவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் மாநிலம் முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  இதையடுத்து, பயிற்சி மருத்துவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையை கவனித்து வரும் முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் மூத்த மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏழை எளிய மக்கள்தான் அரசு மருத்துவமனைக்கு அதிகம் வருகிறார்கள். எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் மீது கூடுதல் கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைகள் எவ்விதப் பிரச்னையுமின்றி சுமுகமாகச் செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
  பாஜகவின் தூண்டுதலின்பேரில்தான் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
  இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து மம்தா விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் மஜூம்தார் கூறுகையில், பிரச்னைக்கு சுமுகத்தீர்வு காண முயற்சிக்காமல், மருத்துவர்களை மிரட்டும் வகையில் முதல்வர் மம்தா நடந்து கொள்கிறார். 
  சூழ்நிலையை எப்படிக் கையாள வேண்டும் என்பது தெரியாமல், பாஜக மீது வீண் பழி சுமத்துகிறார். முதலில் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும். உண்மையில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள்தான் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai