இந்தியாவில் தொழில் புரிவது கடினம்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ

இந்தியாவில் தொழில் புரிவது கடினம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில் புரிவது கடினம்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ


இந்தியாவில் தொழில் புரிவது கடினம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து மைக் பாம்பேயோ பேசியதாவது:
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு நிறுவனத்தை நடத்தி வந்தேன். அந்தக் காலகட்டத்தில், இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்துக்கு அந்த பாகங்களை விற்கும் நோக்கில், சென்னைக்கும் பெங்களூருக்கும் பயணம் மேற்கொண்டேன். அந்த நகரங்களில் சில காலம் தங்கியிருந்தேன்.
அப்போது, இந்தியாவில் தொழில் புரிவது கடினமான காரியமாக இருந்தது. இருந்தபோதிலும், நாங்கள் அதைத் திறம்படக் கையாண்டோம். தற்போதும் இந்தியாவுடன் தொழில் புரிவதில் பல்வேறு வர்த்தகத் தடைகள் நிலவி வருகின்றன. அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தடைகளைச் சரிசெய்ய அமெரிக்கா தயாராக உள்ளது.
சிறந்த கூட்டாளி: அமெரிக்காவின் சிறந்த கூட்டாளியாக இந்தியா உள்ளது. இரு நாடுகளுக்கும் சாதகமான சூழலை உருவாக்கி, அமெரிக்கப் பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெற்றுவருகிறது. இதன்காரணமாக, எரிசக்தி விவகாரத்தில் மற்ற நாடுகளை இந்தியா சார்ந்திருக்க அவசியமில்லை. அமெரிக்காவில் இதுபோன்று தொடர்ந்து முதலீடு செய்தால், இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்கத் தொழிலதிபர்களும் தயாராக உள்ளனர்.
ஆச்சரியமேதுமில்லை: உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், உண்மையைக் கூறினால், எனக்கு அதில் எந்த ஆச்சரியமுமில்லை. அந்தத் தேர்தலை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தோம். பிரதமர் மோடியே மீண்டும் வெற்றி பெற்று, உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் தலைவராக உருவெடுப்பார் என்று எங்களுக்குத் தெரிந்தது.
தேர்தல் பிரசாரத்தின்போது, சாத்தியமில்லாதது, சாத்தியமானது என்ற வாசகத்தை மோடி முன்னிறுத்தினார். இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தத் தடையாக உள்ள விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தி, அவற்றைச் சரிசெய்வதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவார் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார். 
இந்தியா, இலங்கை, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் மைக் பாம்பேயோ வரும் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com